கஞ்சா விருந்தில் கலந்து கொள்ள ஆன்லைனில் முன்பதிவு: 7 பெண்கள் உள்பட 160 ஐடி பணியாளர்கள் கைது!

  • IndiaGlitz, [Monday,May 06 2019]

ஈசிஆர் சாலையில் மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற்ற கஞ்சா விருந்தில் கலந்து கொண்ட 7 இளம்பெண்கள் உள்பட 160 ஐடி பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் மது, கஞ்சா விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் அந்த ரிசார்ட்டை சுற்றிவளைத்து சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது 7 பெண்கள் உள்பட 160 பேர் மது, கஞ்சா உள்பட பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்தி தெரிய வந்தது. மேலும் இவர்கள் அனைவரும் ஐடி பணியாளர்கள் என்றும் வார இறுதியை ஜாலியாக கழிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்து ஓரிடத்தில் இணைந்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட 160 பேர்களையும் மாமல்லபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட ஆண்கள், பெண்களுக்கு சொந்தமான உடைமைகள், கைப்பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

வீக் எண்ட் பார்ட்டி என்ற பெயரில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.