'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு தடை கேட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
- IndiaGlitz, [Saturday,January 06 2018]
சூர்யா, கீர்த்திசுரேஷ், நடிப்பில் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் வரும் 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.
இந்த நிலையில் இந்த படம் இந்தியில் சூப்பர் ஹிட்டான 'ஸ்பெஷல் 26' படத்தின் கதையில் இருந்து தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்பெஷல் 26' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்த் தாயார் சாந்தி தியாகராஜன் அவர்கள் ஏற்கனவே பெற்றுள்ளார். எனவே இந்த படத்திற்கு தடைகேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக் உரிமையை ஆர்பிபி நிறுவனத்திடம் பெற்றதாக ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். ஞானவேல்ராஜாவின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் சாந்தி தியாகராஜன் அவர்களின் இடைக்கால வழக்கை முடித்து வைப்பதாகவும் அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 12ஆம் தேதி திட்டமிட்டபடி 'தானா சேர்ந்த கூட்டம்' படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.