சென்னையில் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பலி
- IndiaGlitz, [Tuesday,July 24 2018]
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள் என்றும், அவர்களுடைய தலை துண்டாக விழுந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் கூறியுள்ளனர்.
இன்று காலை சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின் வயர் அறுந்து விழுந்ததால் லோக்கல் மின்சார ரயில்கள், ஃபாஸ்ட் செல்லும் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இந்த நிலையில் தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் வந்து கொண்டிருந்த ரயிலில் படிக்கட்டில் பலர் பயணம் செய்தனர். கூட்ட நெரிசல் காரணமாக ரயில் படியில் பயணம் செய்தவர்களில் 7 பேர் ரயில்பாதை அருகே இருந்த தடுப்புச்சுவரில் மோதி அடுத்தடுத்து தவறி விழுந்தனர். இவர்களில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து பரங்கிமலையில் நேரில் ஆய்வு செய்த ரயில்வே கூடுதல் டிஐஜி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியபோது, 'இந்த விபத்து நடைபெற்றது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்காமல் இருக்கவும், தடுப்புச்சுவரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரயில் வர தாமதம் என்று கூறி படிக்கட்டுகளில் பயணம் செய்வது ஆபத்தானது. பயணிகள் படிக்கட்டுகளில் பயணித்ததே இந்த கோரா விபத்திற்கு முதன்மை காரணம். பயணம் செய்தவர்கள் ரயிலுக்குள் இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது' என்று கூறினார்.