திறக்கப்படுகிறது செம்பரப்பாக்கம் ஏரி: 2015 திரும்புமா?
- IndiaGlitz, [Wednesday,November 25 2020]
வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் காரணமாக நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக வேகமாக முழு கொள்ளளவை நோக்கி நிரம்பி கொண்டிருந்த நிலையில் தற்போது நிவர் புயலால் பெய்த மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
சற்றுமுன் செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் உயரம் 22 அடியாக உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி என்ற நிலையில் 22 அடி நிரம்பிவிட்டால் நீர் திறந்துவிட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி செம்பரம்பாக்கம் ஏரி இன்று பகல் 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி பகல் 12 மணி அளவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளாதால் ஏரி திறக்கப்படுவதை பார்க்க அதிகளவில் வரும் மக்கள் கூட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடி நீர் திறந்துவிட்டாலும் கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் போல் இந்த முறை சென்னைக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.