'செக்க சிவந்த வானம்' பொன்னியின் செல்வன் கதையா?
- IndiaGlitz, [Friday,August 17 2018]
மணிரத்னம் ஏற்கனவே இயக்கிய ஒருசில படங்கள் வரலாறு மற்றும் சரித்திர சம்பவங்களை தழுவி இருக்கும் என்பது அவரது படத்தை ஆழமாக பார்ப்பவர்களுக்கு புரிந்திருக்கும். ரஜினி-மம்முட்டி நடித்த 'தளபதி' படத்தில் துரியோதனன் - கர்ணன் சாயலும், அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய் நடித்த 'குரு' படத்தில் அம்பானி சாயலும், அரவிந்தசாமி, மதுபாலா நடித்த 'ரோஜா' படத்தில் 'சத்தியவான் சாவித்ரி' சாயலும், பிரகாஷ்ராஜ், மோகன்லால் நடித்த 'இருவர்' படத்தில் எம்ஜிஆர்-கருணாநிதி சாயலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' திரைப்படம், அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலின் சாயல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கேரக்டர்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்க்கும்போது 'பொன்னியின் செல்வன்' நாவலில் வரும் கேரக்டர்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன் மற்றும் பழுவேட்டரையர் ஆகியோர்களின் கேரக்டர்களை ஒட்டி 'வரதன்', 'தியாகு', 'ரசூல்' மற்றும் 'எத்தி' கேரக்டர்கள் இருப்பது போன்று பலருக்கு தோன்றுகிறது.
அதேபோல் இனிவரும் போஸ்டர்களில் இருந்து குந்தவை, வானதி, நந்தினி கேரக்டர்கள் யார் யார் என்பது புரியவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்க திட்டமிட்டிருந்த மணிரத்னம், தற்போது அந்த கேரக்டர்களின் பாதிப்பில் இந்த படத்தை எடுத்திருப்பாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த சந்தேகம் படம் பார்த்தால் மட்டுமே தீரும் என்பதால் இந்த படம் வெளியாகும் வரை பொறுமை காப்போம்