Charlie Chaplin 2 Review
'சார்லி சாப்ளின் 2' : கலகலப்பும் காமெடியும்
பிரபுதேவா, பிரபு, ஷக்தி சிதம்பரம் கூட்டணியில் சார்லி சாப்ளின் முதல் பாகம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான நிலையில் 17 வருடங்கள் கழித்து அதே கூட்டணியில் 'சார்லி சாப்ளின் 2' வெளிவந்துள்ளது. முதல் பாகம் போலவே இந்த படமும் கலகலப்புடன் இருக்கின்றதா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
தனியார் மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்தி வரும் பிரபுதேவா, வெற்றிகரமாக 99 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்துள்ள நிலையில் 100வது திருமணத்தை தன்னுடைய திருமணமாக இருக்க விரும்புகிறார். இந்த நிலையில் நிக்கி கல்ராணியை பார்த்தவுடன் காதல் கொள்ளும் பிரபுதேவா, அவர் பிரபுவின் மகள் என்பதை அறிந்து, திருமணம் குறித்து பேச பெற்றோர்களுடன் செல்கிறார். நிச்சயதார்த்தமும் நல்லபடியாக முடிய, அதன்பின் குடிபோதையில் நண்பர்களுடன் இணைந்து ஒரு சர்ச்சைக்குரிய வீடியோவை நிக்கி கல்ராணியின் மொபைலுக்கு அனுப்புகிறார் பிரபுதேவா. இந்த வீடியோவால் ஏற்படும் பிரச்சனைகளும், இந்த பிரச்சனைகளை பிரபுதேவா தனது நண்பர்களுடன் எதிர்கொண்டு சமாளிப்பது எப்படி என்பதும்தான் இந்த படத்தின் கதை.
நிக்கி கல்ராணி, ஆதா ஷர்மா ஆகிய இரண்டு ஹீரோயின்களிடம் மாட்டிக்கொண்டு திருட்டு முழி முழிப்பது மட்டும் தான் இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு வேலை. காமெடி காட்சிகளில் நண்பர்கள் நடிக்கும் அளவிற்கு கூட பிரபுதேவாவுக்கு காமெடி வரவில்லை என்பது சோகம். ஆனால் வழக்கம்போல் பாடல் காட்சிகளில் நடனத்தில் அசத்துகிறார்.
பிரபு வழக்கம்போல் சாப்பாட்டு ராமனாகவும், ஹீரோயின் நிக்கி கல்ராணிக்கு தந்தையாகவும் நடித்துள்ளார்.
நாயகிகள் நிக்கி கல்ராணி, ஆதா ஷர்மா இருவருக்கும் பிரபுதேவாவுடன் மாறி மாறி டூயட் பாடுவது, லூசு மாதிரி நடிப்பது ஆகிய காட்சிகளே அதிகம். ஒருசில காமெடி காட்சிகளும் இருவருக்கும் உள்ளது.
படத்தின் இரண்டாம் பாதி கலகலப்பிற்கு துபாய் ராஜா கேரக்டரில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா மற்றும் அரவிந்த் ஆகாஷ் இருவருமே முக்கிய காரணம். இருவரும் காமெடியில் பின்னி எடுத்துள்ளனர். அதேபோல் புல்லட் புஷ்பராஜ் கேரக்டரில் ரவிமரியா ஒருசில காட்சிகளில் வந்தாலும் காமெடியில் கலக்கியுள்ளார். இரண்டே காட்சிகளில் தோன்றும் நாசர் மகன் லூஃபுதினுக்கு கதையை திருப்புமுனையாக்கும் கேரக்டர் என்பதால் மனதில் நிற்கின்றார்.
அம்ரேஷ் கணேஷ் இசையில் செந்தில் -ராஜலட்சுமி பாடிய 'சின்ன மச்சான்' பாடலுக்கு தியேட்டரே கலகலப்பாகிறது. இந்த பாடலை சரியான இடத்தில் வைத்ததில் இயக்குனரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. மற்றபடி ஒரு காமெடி கதைக்கு தேவையான பின்னணி இசை என்பதும் ஓகே ரகம்
முழுக்க முழுக்க காமெடியை மனதில் வைத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். அதனால் சீரியஸாக ஒரு காட்சி கூட இல்லை. ஒரே ஒரு மொபைல் வீடியோவை வைத்து படம் முழுவதையும் நகர்த்திவிட்டது புத்திசாலித்தனம் என்றாலும் ஒரு கட்டத்தில் சலிப்பாகிவிடுகிறது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது விஜய் படங்களின் டைட்டில்களை வைத்து ஐயர் வசனம் பேச, அதற்கு பிரபு, 'ஏன் சாமி நீங்க நம்ம தம்பி விஜய் ரசிகரா? என கேட்பது நல்ல கலகலப்பு. பிரபுதேவா, நிக்கி கல்ராணி, ஆதா ஷர்மாவை மட்டும் நம்பாமல் சின்ன சின்ன கேரக்டர்களுக்கும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் படம் நூலிழையில் தப்பித்துள்ளது.
மொத்ததில் இரண்டாம் பாதியின் காமெடி காட்சிகளுக்காக படத்தை பார்க்கலாம்
- Read in English