தமிழர் அடையாளங்களை மாற்றுவது திராவிடத்திருட்டுத்தனத்தின் உச்சம்.....! சீமான் காட்டம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் நூல்களுக்கு, 'திராவிடக் களஞ்சியம்' என பெயர் வைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இதை செய்தால் அரசு கடும் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை ‘திராவிடக்களஞ்சியம்’என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பெருமைமிக்கத் தொல்தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத்திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழர்களை திராவிடர்கள் என்பது, தமிழ்நாட்டைத் திராவிட நாடு என்பது, தமிழ் இலக்கணத்தைத் திராவிட இலக்கணம் என்பது, தமிழர் திருநாளான பொங்கலை திராவிடர் திருநாள் என்பது, தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் திராவிட மன்னன் என்பது, தமிழர் கட்டிடக்கலையைத் திராவிடக்கட்டிடக்கலை என்பது, தமிழர் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்பது, தமிழ் கல்வெட்டுக்களைத் திராவிடக்கல்வெட்டுக்கள் என்பது, தமிழர் பண்பாடான கீழடியைத் திராவிடப்பண்பாடெனத் திரிப்பது என தமிழர்களின் மொழி, இனம், நிலம், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, நாகரீகம் தொடர்பான தொன்ம அடையாளங்கள் யாவற்றையும் அழித்து, அவற்றின் மீது திராவிட முத்திரை குத்தியது போதாதென்று, தற்போது, தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதற்கான வரலாற்று பெருஞ்சான்றுகளாகவும், யாராலும் மறுக்கமுடியாத தரவுகள் நிறைந்த ஆவணங்களாகவுமுள்ள தமிழ் நூல்களைத் ‘திராவிடக்களஞ்சியம்’ எனும் பெயரில் அடையாள மாற்றம் செய்ய முயல்வது திராவிடத்திருட்டுத்தனத்தின் உச்சமாகும். இந்நாடு தமிழ்நாடு; இங்கு வாழும் மக்கள் தமிழ் மக்கள்; மொழி தமிழ்மொழி; அதில் எழுதப்பட்டவை யாவும் தமிழ் இலக்கியங்கள்; அந்த நூல்களைத் தொகுக்கின்றபோது மட்டும் எப்படித் திராவிடக்களஞ்சியமாக மாறும்? எனும் கேள்விக்கு எவரிடமும் விடையில்லை.
தமிழர் தலைவர், தமிழினத் தலைவர் என்று அடைமொழிகளைத் தங்களுக்கு வைத்துக்கொண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாடு எனப்பேசி வாக்குகளைப் பெற்று வென்று, ஆட்சியதிகாரத்தை அடைந்துபிறகு, திராவிட இனம் , திராவிடக் களஞ்சியம், திராவிடச் சிறுத்தை என்று பேசுவது திட்டமிட்ட தமிழர் அடையாள அழிப்பு வேலையாகும். இப்போது திராவிடம், திராவிடர் என்று பேசுவோர், தேர்தலுக்கு முன் வாக்கு கேட்டு செல்லும்போதோ, தங்கள் கட்சி மாநாடுகளுக்கு அழைக்கும்போதோ திராவிடர்கள் என்று ஒருபோதும் கூறுவதில்லையே ஏன்? திராவிட இனம் கூறிவிட்டு நாட்டின் பெயரை மட்டும் திராவிட நாடு என்று மாற்றாமல் ஏன் தமிழ்நாடு என்று மாற்றினீர்கள்?
அந்நியர்கள் தமிழர் நிலத்தில் ஆளுகை செய்யவும், அதிகாரம் செலுத்தி தமிழர்களை அடிமைப்படுத்தவும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட அரசியல் விலங்குதான் திராவிடமாகும். அடிப்படையில், திராவிடர்கள் எனக் கூறப்படுவோர்க்கு தனித்த அடையாளங்கள் ஏதுமில்லாததால், தமிழர்களது மொழி, இன, தேச, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்களைத் திருடித் தன்வயப்படுத்துகிற சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். தற்போதைய செயல்பாடும் அதன் நீட்சியேயாகும். மொத்தத்தில், தமிழர்களை திராவிடர்கள் எனத் தவறாக அடையாளப்படுத்தியது ஒரு வரலாற்றுப்பேரவலமாகும்.
தமிழர்களை திராவிடர்கள் என்பதற்கு எடுத்தாள்கிற ஆதாரங்கள் யாவும் மனுஸ்மிருதி உள்ளிட்ட சமஸ்கிருத நூற்களின் குறிப்புகள் என்பதே, திராவிடம் என்பது ஆரியத்தின் கள்ளக்குழந்தை என்பதை உறுதிப்பட நிறுவுகிறது. ஆங்கிலேயர்கள் எப்படித் தங்கள் உச்சரிப்புக்கு ஏற்றவாறு தமிழக ஊர்களின் பெயர்களை மாற்றினார்களோ, அப்படித்தான் ஆரியர்கள் கையாண்ட திராவிட உச்சரிப்பும். அதுவும் விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த ஆரியர்களைக் குறிக்கவே திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினர். எனவே, சொல்லளவில் பார்த்தாலும், பொருளளவில் பார்த்தாலும் திராவிடம் என்பது தமிழருக்கு எதிரானதேயாகும். தமிழர் அல்லாத வடவர்கள் செய்த உச்சரிப்புப்பிழைக்காக அதை ஒரு தேசிய இனத்தின் மீது திணிப்பது வரலாற்றுப்பெருங்கொடுமை. நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்றியபோதே அதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துக் கி.ஆ.பெ விசுவநாதம், அண்ணல் தங்கோ உள்ளிட்ட தமிழினத் தலைவர்கள், ‘தமிழர் கழகம்’ என்று பெயர் மாற்ற வலியுறுத்தி உரிமைக்குரல் எழுப்பினர். ஆனால், நீதிக்கட்சியில் பிறமொழியாளர்கள் ஆதிக்கம் அதிகமிருந்த அக்காலத்தில் தமிழர்களின் உரிமைக்குரல் எடுபடாமலே போனது. ஒரு குறிப்பிட்ட சிலரின் வாழ்வுக்கும், வளத்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகாலமாகத் தொடர்ந்துவரும் ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தையே மாற்றுவதென்பது தமிழ் மண்ணிற்கும், இனத்திற்கும் செய்கிற பச்சைத்துரோகமாகும்.
‘வடமொழியை நட்பாகக்கொள்ளும் திராவிடத்திற்கும், பகையாகக்கொள்ளும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை. பால் தயிராய் திரிந்தப்பின் மீண்டும் பாலாகாததுபோல, வடமொழி கலந்து ஆரியமயமாகிப்போன திராவிடம் மீண்டும் தமிழாகாது. வடமொழிக் கலப்பால் திராவிடம் உயரும்; தமிழ் தாழும். திராவிடம் அரை ஆரியமும், முக்கால் ஆரியமுமாதலால் அதனோடு தமிழை இணைப்பின், அழுகலோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல், தமிழும் கெடும். தமிழனும் கெடுவான். பின்பு, தமிழுமிராது; தமிழனுமிரான். இந்தியா முழுவதும் ஆரியமயமாகி விடும். தமிழ் வேறு; திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக! தமிழ் என்னும் சொல்லிலுள்ள உணர்ச்சியும், ஆற்றலும் திராவிடம் என்னும் சொல்லில் இல்லை. தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி, திராவிடம், திராவிடன், திராவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது. திராவிடம் என்பதே தீது! தீது!’ என எச்சரிக்கிறார் மொழிஞாயிறு ஐயா தேவநேயப்பாவாணர்.
‘தமிழ்நாடு’ என்று கூறத்தவறி, ‘திராவிட நாடு’ என உச்சரித்ததால் தமிழர்களின் தேசிய இன உணர்ச்சி மழுங்கடிக்கப்பட்டது. வழக்கொழிந்த வடமொழிகூட சமஸ்கிருத மொழிக்குடும்பம் என உலகரங்கில் பெருமையாக அழைக்கப்படும்போது, அதைவிடப் பழம்பெருமை வாய்ந்த, தொன்றுதொட்டு இன்றுவரை வழக்கத்திலுள்ள, உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக விளங்கக்கூடிய தமிழ்மொழிக்குத் தமிழ்மொழிக்குடும்பம் என்று வழங்கப்பெறாமல், ‘திராவிட மொழிக்குடும்பம்’ எனத்திரித்து வழங்கப்பெற்றதால் தமிழ்மொழி தன் பெருமையையும், சிறப்பையும் இழந்து நிற்கிறது. ‘திராவிட இனம்’ என்ற சொல்லே தமிழர்களை உளவியலாகச் சிறைப்படுத்தி முடக்கிப்போட்டது. மொழிச்சிதைவுக்கே வடவர்களுக்கு எதிராகப் போர் தொடுத்திட்ட தமிழினம், ஈழ நிலத்தில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டப்போதும் நெட்டை மரங்களென அசைவற்று நின்றது . தமிழர்கள் இன உணர்ச்சியை அடையவிடாது தடுத்துக்கெடுத்ததில் திராவிட மறைப்புகளுக்கு முதன்மைப்பங்குண்டு. தமிழ், தமிழர், தமிழர் நாடு என உச்சரிக்கத்தவறி, அடையாளத்தைத் தொலைத்து, இன உணர்வை இழந்ததால், இனப்படுகொலையையே சகித்துக்கொள்ளும் அளவுக்குப் பேரிழப்பில் தமிழர்களைக் கொண்டுபோய் நிறுத்தியது.
ஆரிய அதிகார வர்க்கம், தமிழ் மொழியிலுள்ள ஊர்களின் பெயர்களைச் சமஸ்கிருதமாக மாற்றியது. தமிழர் தெய்வங்களின் பெயர்களைச் சமஸ்கிருதமாக மாற்றியது. மக்களின் பெயர்களும் சமஸ்கிருதமாக மாறியது. மக்கள் பெயரும், ஊர்களின் பெயரும், தெய்வங்களின் பெயரும் வடமொழியாக்கப்படும்போது, அந்நிலமே தமிழர் அல்லாத ஆரியர்கள் வாழ்ந்த இடங்களாக அடையாளப்படுத்தக்கூடிய ஆபத்துண்டு. எனவே, பெயர் மாற்றம் என்பது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. அது நம் அடையாள அழிப்பு. வரலாற்றுத்திரிபாகும். மொழியிலுள்ள பெயர்களை மாற்றுவதே அடையாள அழிப்பென்றால், திராவிடம், திராவிடர், திராவிட நாடு எனக்கூறி, தமிழ் மொழியின், இனத்தின், நிலத்தின் பெயரையே மாற்றுவது அதைவிடப் பன்மடங்கு பேராபத்தாகும்.
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதற்கான சான்றுகள் சங்கத்தமிழ் இலக்கியங்கள் முழுதும் விரவி கிடக்கிறது. ஆனால், திராவிடம், திராவிடம் என்பதற்கான சான்றுகள் எதுவும் சங்கத்தமிழ் இலக்கியங்களிலோ, காப்பியங்களிலோ இல்லை என்பது மறுக்கவியலா பேருண்மையாகும். திராவிடத்திற்கான மூலச்சான்றுகள் கற்பனைத் திணிப்புகளாகவும், தமிழர்களல்லாத அந்நியர்களின் கூற்றுகளாகவும், சமஸ்கிருத மொழி இலக்கியங்களாகவும் உள்ளன. தமிழ் மொழிக்கென்று தனித்த இலக்கியங்கள் உள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளுக்கும் கூட இலக்கியங்கள் உள்ளன. ஆனால் திராவிட மொழிக்கென்று இலக்கியம் எங்கே உள்ளது ? முதலில் திராவிடம் என்பது ஒரு இனத்தின் பெயரா? மொழியின் பெயரா? நிலத்தின் பெயரா? திசையின் பெயரா? நிறத்தின் பெயரா? அல்லது தத்துவத்தின் பெயரா? திராவிடம், திராவிடர் எனும் சொல்லாடல்களுக்கு முதலில் திமுக அரசு விளக்கமளிக்க முன்வர வேண்டும். தமிழகத்திலுள்ள ஒருசில திராவிட அரசியல்வாதிகளைத் தவிர, எந்தத் தென்மாநில மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர் என்பதையும், எந்தச் சங்கத்தமிழ் இலக்கியத்தில் திராவிடம் என்பதற்கான சான்றுகள் உள்ளன என்பதையும் ஆளும் திமுக அரசு திராணியிருந்தால் தெளிவுப்படுத்தட்டும்.
தமிழ்ப்பேரினத்தின் வரலாறுகள் யாவும் மறைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட நிலையில் மீதமிருக்கும் இலக்கியச் சான்றுகளையும் திருடி, கையகப்படுத்தி, திராவிடமயமாக்க முயல்வது ஈனச்செயலாகும். ஆயிரமாண்டுகளாக தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும் தமிழர்களின் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றைத் தலைமுறைகள் கடந்து, கடத்தி வருபவை தமிழ் இலக்கியங்களேயாகும். இவ்வாறு தமிழர்களின் அறிவுக்கொடையாக, கருத்துக்கருவூலமாக விளங்கும் பழந்தமிழர் இலக்கியங்கள் மீது கை வைப்பதென்பது தமிழர் இனத்தையே முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் வஞ்சகச்செயலேயாகும்.
எனவே சங்க இலக்கியங்கள் என்றாலும் சரி, அதற்குப் பின்வந்த இலக்கியங்கள் என்றாலும் சரி எந்தவொரு தமிழ் நூல்களுக்கும் ‘திராவிட இலக்கியம்’ என்று பெயர்மாற்றம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கால்டுவெல் என்ற ஆங்கிலேயர் ‘திராவிடம்’ என்று சொல்லிவிட்டார் என்பதற்காக தமிழ் நூல்களைத் தொகுத்து, ‘திராவிட இலக்கியம்’ என்று பெயர்மாற்றுவது, சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் சட்டமியற்றியதற்காக தமிழர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் ஆரியர்களின் சூழ்ச்சிக்கு ஒப்பானது. அத்தகைய கொடுஞ்செயலை தமிழ் இளந்தலைமுறையினரும், இனமானத்தமிழர்களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என அறுதியிட்டு உரைக்கிறேன்.
ஆகவே, ஆளும் திமுக அரசு தனது தமிழர் அடையாள அழிப்பு முயற்சியைக் கைவிட்டு, தமிழ் நூல்களின் தொகுப்பிற்கு, ‘தமிழ்க்களஞ்சியம்’ என்றே பெயர் சூட்டவேண்டுமென வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத்தவறி, தமிழர்களின் உணர்வுகளை அலட்சியம் செய்யும்பட்சத்தில், மிகக்கடுமையான போராட்டங்களை அரசு எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.
சங்கத்தமிழ் இலக்கியங்கள் உட்பட எந்தவொரு தமிழ் நூல்களின் தொகுப்பிற்கும், ‘திராவிடக் களஞ்சியம்’ எனப் பெயரிட முனைந்தால் கடும் போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும்!https://t.co/zrtonzgBvn pic.twitter.com/0XXP32c2gY
— சீமான் (@SeemanOfficial) September 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout