சண்டி வீரன் - திரை விமர்சனம்
- IndiaGlitz, [Friday,August 07 2015]
தண்ணீர் பற்றி ஒரு திடமான படம்
தண்ணீர் பிரச்சனை பற்றிப படங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் 'தண்ணீர் தண்ணிர்' என்ற தலைப்பிலேயே ஒரு படம் எடுத்து நீராதாரம் அற்ற கிராமத்தின் துன்பங்களைப் பதிவு செய்தார் இன்றளவும் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக நினைவுகூரப்படும் படம் அது.
இரண்டாவது படத்திலேயே தேசிய விருது பெற்ற சற்குணம் இயக்கியிருக்கும் சண்டி வீரன்' படமும் குடிநீரின்றித் தவிக்கும் கிராமத்தின் பிரச்சனைகளைப் பேசுகிறது. தேசியவிருதுகளைக் குவித்த இயக்குனர் பாலா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறர். அதன் தாக்கம் எந்த அளவு இருக்கிறது?
பாரி (அதர்வா) சிங்கப்பூரிலிருந்து தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். பஞ்சாயத்து பிரசிடெண்டும், ஊரில் உள்ள அனைவரது மரியாதையைப் பெற்றவருமான மில் ஓனரின் (லால்) மகளும் (ஆனந்தி) அவனும் காதலிக்கிறார்கள்.
பாரியின் கிராமத்து எல்லையில் இருக்கும் குளத்து நீர்தான் குளத்துக்கு அந்தப் பக்கம் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர்களுக்கான ஒரே குடிநீர் ஆதாரம். பல ஆண்டுகளாக இந்த கிராமத்து மக்கள் அந்த கிராமத்தினர் தண்ணீரைப் பயன்படுத்தவிடாமல் செய்கிறார்கள். பணபலமும் பதவிபலமும் மிக்க லால், குளத்தைத் தொடர்ந்து குத்தகைக்கு எடுத்து குளத்து நீரின் மூலம் அவர்களுக்கு உப்புக்கரிக்கும் நீர் மட்டுமே கிடைப்பதை உறுதி செய்கிறார்.
பக்கத்து கிராமத்தின் மக்களின் துயரத்தை அறியும் பாரி, அவர்களுக்கு குடிநீர் கிடைக்கவைக்க எடுக்கும் முயற்சிகள் பிரச்சனையைப் பெரிதாக்குகின்றன. பக்கத்து கிராம மக்கள் அனைவரையும் கொன்றழிக்க தன் கிராம மக்களை ஒன்று திரட்டும் லால், அதோடு தன் மகளைக் காதலிக்கும் பாரியையும் கொல்ல ரகசியத் திட்டம் தீட்டுகிறார்.
அண்டை கிராமத்தையும் தன் உயிரையும் பாரியால் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா என்பதே மீதிக் கதை.
கிராமிய மணம் கமழும் கதைகள் தமிழ்த்திரையில் அரிதாகிவிட்ட சூழலில் கிராமிய ரசம் சொட்டச் சொட்ட ஒரு படம் கொடுத்திருப்பதற்காகவே சற்குணத்துக்கு ஒரு ஷொட்டு. கிராம மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், விழாக்கள், அவர்களின் அப்பாவித்தனம், வன்முறை கலந்த குணம் ஆகியவற்றை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறது படம். கிராமங்களுக்கும் நகர வாழ்க்கைக்கும் தொலைதூர இடைவெளி உருவாகிவிட்ட சூழலில் நகர்ப்புற மக்கள் இந்தப் படத்தைத் இதற்காகவே பார்க்கலாம்.
கிராமப் பாரம்பரியத்தைச் சொலவதோடு நவீன உலகின் சின்னங்களான ஆங்கிலக் கல்வி மோகம், ஸ்மார்ட்ஃபோன் ஆகியவை தொலைதூர கிராமங்களிலும் ஆழமாக ஊடுருவிவிட்டதையும் புரியவைக்கிறது படம். குறிப்பாக கிராமத்து சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும்போது போங்கு அடிப்பவர்களைக் கண்டுபிடிக்க ஸ்டம்பு குச்சியில் ஸ்மார்ட்ஃபோனைப் பொருத்தி போட்டியைப் பதிவுசெய்யும் காட்சித் துணுக்கு ரசிக்க வைக்கிறது.
குடிநீர் தட்டுப்பாடு என்ற எரியும் பிரச்சனையைக் கையிலெடுத்திருக்கும் இயக்குனர் அந்த அடிப்படை உரிமை எப்படி பலருக்கு விலையுயர்ந்த பொருளாக மாறிவிட்டது என்பதை விளக்குகிறார். குடிக்க சுகாதாரமான் நீரற்ற கிராம மக்களின் அவலநிலையை அழுத்தமாகப் பதிவுசெயவதோடு அப்பாவி மக்கள் குடிநீருக்கு வேறொருவரை அண்டி இருக்க வேண்டிய நிலையின் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளையும் ம்றைமுகமாகக் கேள்வி எழுப்புகிறது படம்.
இரண்டு மணி நேரத்துக்கு ஐந்து நிமிடம் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும் படத்தில் தொடக்கத்தில் வரும் காதல், நகைச்சுவைக் காட்சிகள் போரடிக்கவில்லை என்றாலும் சற்று அளவுக்கதிகமாக நீட்டிக்கபப்ட்டிருக்கின்றன. சிங்கப்பூரில் அதர்வா அடிவாங்கி தப்பிப்பதை காட்சிப்படுத்தியிருக்கத் தேவையில்லை. வ்சனத்தில் சொல்வதே போதுமானதாக இருந்திருக்கும். படத்தின் மையக்கதைக்கும் அதற்கும் பெரிய தொடர்பு ஒன்றும் இல்லை.
ஆனால் படத்தின் மையச்சிக்கலுக்குள் நுழைந்தபின் படம் தீவிரமடைகிறது. இடைவேளையின்போது பிரச்சனை உக்ரமடைந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது
இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் வரும் பாடல் இரண்டு மணி நேரமாவது படம் ஓட வேண்டும் என்பதற்காகவே வைக்கப்பட்டதாக்த் தோன்றுகிறது. ஆனால் அதன் பின் ஒற்றை மனிதனாக நாயகன் ஒரு கிராமத்தைக் காப்பாற்ற முயலும் காட்சிகள் விறுவிறுப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்கின்றன. ஆனால் இறுதியில் அனைவரும் நல்லவராக மாறுவது அதுவரை ஏற்பட்ட தாக்கத்தை சற்று குறைந்துவிடுகிறது.
அதோடு இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பக்கத்து கிராமத்தவருக்குத் தண்ணிர் தர மறுப்பதற்குக் வரட்டுப் பிடிவாதம் காரணம் என்பது விளக்கப்பட்டாலும் தண்ணீர் பகிர்வதில் உள்ள பிரச்சனையை இன்னும் விவரமாக சொல்ல அதிக நேரம் எடுத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் படம் எடுத்துக்கொண்ட பிரச்சனையின் தீவிரத்தன்மை இன்னும் ஆழமாக ரசிகர்களைச் சென்றடைந்திருக்கும்.
நடிகர்களில் அதர்வா விளையாட்டுத்தனமான கிராமத்து இளைஞனாகவும் மற்றவர்களின் பிரச்சனையைத் தோளில் சுமந்து தீர்வு தேட முயற்சிக்கும் மனிதனாகவும் நன்றாகப் பொருந்துகிறார் வசன உச்சரிப்பில் மட்டும் சற்று கவனம் செலுத்த வேண்டும். 'கயல்' ஆனந்தி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நடிப்புக்குப் பெரிய வேலை இல்லை. வரட்டுப் பிடிவாதமும் சர்வாதிகார மனோபாவமும் மிக்க மனிதராக வரும் லால் படத்துக்கு பெரிய பலம். அதர்வாவின் அப்பாவி அம்மாவாக வரும் ராஜஸ்ரீயும் குறைவைக்கவில்லை.
அருணகிரி இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக 'அலுங்குறேன் குலுங்குறேன்' டூயட் பாடல் நம்மை 80களில் இளையராஜா இசையமைத்த எண்ணற்ற கிராமிய மணம் கமழும் டூயட் பாடல்களுக்குக் கொண்டுசெல்கிறது. சபேஷ்-முரளியின் பின்னணி இசை காட்சிகள் சரியான தாக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு ஒரு பச்சைப் பசேலென்ற கிராமத்துக்குச் சென்றுவிட்டு வந்த உணரவைத் தருகிறது. ஆனால் தண்ணிர் பிரச்சனை பற்றிய படம் என்பதற்காக அடிக்கடி டாப் ஆங்கிள் ஷாட் எதற்காக?
ஒரு முக்கியமான பிரச்சனையை அலுப்புத்தட்டாமல் திரையில் விவரித்திருக்கும் இந்தப் படத்தை நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.
மதிப்பெண்- 2.5/5