'சந்திரமுகி 2' ரிலீஸ் எப்போது? போட்டியில்லாமல் ரிலீஸ் ஆகிறதா?

  • IndiaGlitz, [Monday,June 26 2023]

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு இப்போது வரை எந்த போட்டியும் இல்லை என்றும் கூறப்படுகிறது

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில், எம்எம் கீரவாணி இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’சந்திரமுகி 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படப்பிடிப்பு முடிவடைந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் படப்பிடிப்பு நிறைவு நாளில் பட குழுவினர் எடுத்த குரூப் புகைப்படம் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தை செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்போது வரை செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என்பதால் இந்த படம் போட்டியின்றி சோலோவாக ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படம் லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது. ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டா தரணி கலை இயக்கத்தில் உருவாகி வரும் பெரும் படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.