தமிழகத்தில் கனமழை… சென்னை வானிலையின் புதிய அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Monday,November 30 2020]
தென் தமிழகத்தில் வரும் டிசம்பர் 1-4 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. “தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ளள்ளது. இது புயலாக மாறி வரும் 2 ஆம் தேதி இலங்கையில் கரையைக் கடக்கும். பின்னர் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. எனவே தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என சென்னை வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்திலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கு உரிய சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், கேரளம், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புயல் பற்றிய எச்சரிக்கை வெளியாவதற்கு முன்பே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 600 பேர் 46 விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இவர்களை உடனடியாக கரைக்கு வருமாறு அம்மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியதை அடுத்து இன்று கரைக்கு வந்து சேருவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.