இந்தியா-பாகிஸ்தான் ஃபைனல்: பணமழையில் நனையும் தனியார் சேனல்
- IndiaGlitz, [Saturday,June 17 2017]
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் அதை ஒரு போட்டியாக பார்க்காமல் போராக பார்க்கும் மனப்பான்மை கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஃபைனலில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம், ரசிகர்களுக்கு உச்சகட்ட டென்ஷன் இருக்கும். கடந்த 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோதிய இந்தியா-பாகிஸ்தான், பத்து வருடங்கள் கழித்து மீண்டும் சாம்பியன்ஷிப் டிராபி போட்டியின் இறுதி போட்டியில் நாளை மோதவுள்ளது.
இந்த நிலையில் நாளை மைதானத்தில் ரன்மழை மட்டும் பொழியபோவதில்லை. இந்த போட்டியை ஒளிபரப்பு தனியார் சேனலுக்கு பணமழையும் கொட்டோ கொட்டு என்று கொட்டப்போகிறது. சாதாரணமாக ஒரு இந்தி சேனலில் 30 வினாடி விளம்பரத்திற்கு ரூ.10 லட்சம் தான் கட்டணம். ஆனால் நாளை போட்டியின் இடையே ஒளிபரப்பாகும் 30 வினாடி விளம்பரத்திற்கு ரூ.1 கோடி வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த போட்டியில் ரூ.2000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் சூதாட்டக்காரர்கள், போட்டியின் முடிவை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக வீரர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.