சிவாஜியின் தோல்வியை விட கமல் தோல்வி பெரிது அல்ல: சாருஹாசன்
- IndiaGlitz, [Wednesday,May 12 2021]
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு கமல்ஹாசன் தோல்வி அடைந்தார். இந்த தோல்வி குறித்து அவருடைய சகோதரர் சாருஹாசன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
தோல்வி என்பது எல்லோருக்கும் ஏற்படும், அது தற்போது கமல்ஹாசனுக்கும் ஏற்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லை என்று நினைத்தால் யாரையும் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. ஒரு சிலர் கமல்ஹாசனை திணிக்க முயன்றார்கள், அதனால் இந்த தோல்வி ஏற்பட்டு உள்ளது. இது கமல்ஹாசன் மீதான தவறல்ல, அவரை திணிக்க முயற்சித்தவர்களின் தவறு என்று கூறினார்.
மேலும் சிவாஜி தோல்வியை விட கமல் தோல்வி பெரிய தோல்வி அல்ல என்றும் கமல்ஹாசன் தோல்வி தான் பெரிய தோல்வி, மற்றவர்களுடைய தோல்வி சின்ன தோல்வி அல்ல என்றும் சாருஹாசன் கூறினார். மேலும் கமல்ஹாசன் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் பிரச்சனைகளில் முன்னிற்பார் என்று அழுத்தமாகக் கூறினார்.
கமலஹாசன் தோல்வியடைந்தது எங்கள் அனைவருக்கும் வருத்தம்தான் என்றும் வெற்றி தோல்வி சகஜம் என்பதால் அதை பெரிதாக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சாருஹாசன் மேலும் கூறினார். மேலும் தமிழகத்தில் இனி பிராமணர்களுக்கு இடம் இல்லை என்றும் இது திராவிட நாடு என்றும் கமல்ஹாசனின் தோல்விக்கு அவரது ஜாதியும் ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விஜயகாந்த் தனிக்கட்சி ஆரம்பிக்காமல் அதிமுகவில் இணைந்திருந்தால் இந்நேரம் முதலமைச்சராகி இருப்பார் என்றும் அதேபோல் ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று இருப்பார் என்றும் சாருஹாசன் கூறினார்.