பள்ளிகள் திறப்பது எப்போது? மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு ரத்து என்றும், மாணவர்கள் அனைவரும் பாஸ் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனை செய்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கலாம் என்று கூறப்பட்டு வந்தாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து ஆலோசனையை கேட்டு உள்ளது.

இது குறித்து வரும் 20-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் எந்த மாதத்தில் பள்ளிகள் திறக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து மின்னஞ்சலை அனுப்ப தயாராகி வருகின்றனர். பெரும்பாலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதமே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.