தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்புக்காக மீண்டும் திறக்கலாம்… மத்திய அரசு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதோடு ஏப்ரல் 20 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து ஆக்சிஜன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பும் காலதாமதமானது என்ற விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
இதற்கிடையில் மத்திய அரசின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் இருந்து 45 ஆயிரம் கிலோ ஆக்சிஜன் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் தமிழக அரசின்மீது தற்போது கடும் குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. இப்படி இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையைக் குறித்து அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கவனம் செலுத்தி வரும் நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் பிச்சை எடுத்தாவது இந்திய மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்பிற்காக மீண்டும் திறக்கலாம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து இருக்கிறது. இந்த விளக்கத்தை ஒட்டி பலரும் தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீதான விவாதத்தை கிளப்பி உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த நிறுவனத்தில் இருந்து 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments