தமிழகத்தில், இலாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் பெருமைமிகு தொழில் அடையாளங்களாகத் திகழ்ந்துவரும் ‘பெல்’ (BHEL) எனப்படும் பாரத மிகுமின் நிறுவனம், ‘செயில்’ (SAIL) எனப்படும் சேலம் உருக்காலை, என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயம் ஆக்குவதற்கு நீண்டகாலமாக முயற்சி நடந்துவருகிறது.
எப்போதெல்லாம் தனியார்மய முயற்சி நடக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பும். அந்த எதிர்ப்பு, ஆட்சியாளர்களை யோசிக்கவைக்கும். ஆனால், இப்போது மத்தியில் அறுதிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியதிகாரத்தில் இருப்பதால், எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தனியார்மய நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய அளவில் ஜனவரி 8-ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. சுமார் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றனர். அதே நாளில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை, பெல் உட்பட ஆறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாரிடம் கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, தாதுப்பொருள்கள் சட்டத்தைத் திருத்தி அவசரச் சட்டம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காமராஜர் ஆட்சியில் திருச்சிக்குக் கொண்டுவரப்பட்ட கனரக மின் உற்பத்தி நிறுவனமான பெல் நிறுவனம், மத்திய அரசின் மகாரத்னா அந்தஸ்தைப் பெற்றது. இதற்கு, தமிழகத்தில் சென்னை, திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னாக்கி நிலையங்களை உருவாக்கத் தேவைப்படும் கொதிகலன்கள் (Boiler), சுழலிகள் (Turbine) மற்றும் பெருவகை மின்னுருவாக்கத்துக்குத் தேவைப்படும் துணைக்கருவிகள் ஆகியவை பெல் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, சுமார் ரூ.23,000 கோடி. லாபத்தில் இயங்கிவரும் இந்தப் பொதுத்துறை நிறுவனம், பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிவருகிறது. இத்தகைய நிறுவனத்தைத் தனியார்மயம் ஆக்குவதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.
வழக்கமாக, நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் கொடுப்பதாக ஆட்சியாளர்கள் சொல்வார்கள். ஆனால், லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் தூக்கிக்கொடுக்க இப்போது அரசு முடிவுசெய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments