'மாஸ்டர்' திரைப்படத்திற்கு மத்திய அரசால் ஏற்பட்ட திடீர் சிக்கல்: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
- IndiaGlitz, [Wednesday,January 06 2021]
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படம் ரிலீஸ் ஆவதற்காகவே திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்திருப்பது காரணமாக ’மாஸ்டர்’ படத்தின் வசூல் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது தவறு என்று திரையுலகில் உள்ள ஒரு சிலரும் சமூக ஆர்வலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்று எழுதி உள்ளது. அதில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதி மீறல் என்றும் திரையரங்குகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டு விதிகளுக்கு ஏற்ப புதிய உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் எழுதியுள்ள இந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.