பாகிஸ்தான் அரசின் புதிய வில்லத்தனம்… கண்டனம் தெரிவிக்கும் மத்திய அரசு!!!

  • IndiaGlitz, [Wednesday,August 05 2020]

 

பாகிஸ்தான் அரசு தனது புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த வரைபடத்தை மத்திய அரசு முற்றிலும் நிராகரித்ததோடு கடும் கண்டனங்களையும் தெரிவித்து இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் அரசு ஊடகம் தவறான பாகிஸ்தான் வரைபடத்தை ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே பாகிஸ்தான் வரைபடத்தில் நிரந்தரமான வரையறை எதுவும் இல்லாமல் இருப்பதால்தான் இதுபோன்ற சிக்கல் ஏற்படுவதாக அந்நாட்டில் கருத்துக் கூறப்பட்டது.

இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் தற்போது புதிய அரசியல் வரைபடத்தை தயாரித்து வெளியிட்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் தயாரித்துள்ள புதிய வரைபடத்தில் வில்லனத்தனமான பல நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டு இருப்பது குறித்து மத்திய அரசு கடும் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகிறது. அதாவது காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என்று அந்த வரைபடம் குறிப்பிடுகிறது. அதோடு இந்தியாவிற்குச் சொந்தமான பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளையும் பாகிஸ்தான் வரைபடம் இணைத்து வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான்-இந்தியா எல்லைப் பிரச்சனைக்கு முக்கியக் காரணமான காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதையும் இணைத்து தற்போது புதிய வரைபடத்தை தயாரித்து வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இதுதான் ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களின் கனவாக இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். மேலும் புதிய வரைபடத்திற்கு அவருடய மந்திரி சபையும் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த வரைபடத்தை மத்திய அரசு நிராகரித்து இருக்கிறது.

மேலும் இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், “அரசியல் வரைபடம் என்ற பெயரில் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள வரைபடத்தை நாங்கள் பார்த்தோம். இது ஒரு அரசியல் அபத்தமான நடவடிக்கை. மேலும் இந்தியாவின் குஜராத் மற்றும் எங்களின் காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேசங்களை உரிமை கோருவதை ஏற்க முடியாது. இந்த அபத்தமான கூற்றுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலோ, சர்வதேச நம்பகத்தன்மையிலோ இல்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக நேபாளம், இந்தியாவின் சில பகுதிகளை இணைத்து வரைபடத்தை உருவாக்கி இந்தியாவிற்கு கடும் தலைவலியை கொடுத்து வருகிறது. அதைப்போல பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை ஒருவேளை சீனாவிற்கு சாதகமாக செய்யப்படுகிறதோ என்ற சந்தேகத்தையும் சிலர் வெளிப்படுத்தி உள்ளனர்.