பாஜக எதிர்ப்பு: கமல், தனுஷ் பட நடிகையின் படத்திற்கு சான்றிதழ் தர சென்சார் மறுப்பு!

இயக்குனர் சசி இயக்கிய ’பூ’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் கமல்ஹாசன் நடித்த ’உத்தமவில்லன்’, தனுஷ் நடித்த ’மரியான்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை பார்வதி. இவர் தற்போது நடித்து முடித்துள்ள மலையால படம் ’வர்த்தமானம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து அடுத்த மாதம் திரைக்கு வர தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் மறுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பிரச்சனையை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் பார்வதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மலையாள மாணவியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதை தேசிய விரோத நோக்கம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதால் இந்த படம் தடை செய்யப்பட வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்த நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர தணிக்கை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. வகுப்புவாத ஒற்றுமையை இந்த படம் ஊக்குவிப்பதால் சான்றிதழ் தர மறுப்பதற்கான காரணத்தை சென்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மேல்முறையீட்டுக்கு படக்குழுவினர் செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.