15 ஆண்டுகள் கழித்து திறக்கப்படும் மயானம்...! குஜராத்தில் தாண்டவமாடும் கொரோனா....!
- IndiaGlitz, [Tuesday,April 13 2021]
சூரத்-தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடந்த 15 ஆண்டுகளாக மூடப்பட்ட மயானத்தை மீண்டும் திறக்கும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம்,சூரத்-தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தினமும் 100-க்கும் அதிகமான சடலங்கள் தகனம் செய்யப்படுவதால், உடலை வைத்துக்கொண்டு 8 முதல் 10 மணிநேரம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடுமையாக அவதியுறுவதால், கடந்த 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மயானத்தை மீண்டும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இங்கு ஒரே நேரத்தில் 30 உடல்களை தகனம் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக கவுன்சிலர் நிலேஷ் படேல் கூறியிருப்பதாவது,
பொதுமக்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே இந்த மயானத்தை திறக்கிறோம். இங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மட்டுமே தகனம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
பால், லிம்பாயத் மற்றும் மோட்டா வராச்சா உள்ளிட்டவற்றில் இருக்கும் மயானத்தில் தகன வசதிகள் இல்லை.இதனால் பல ஆண்டுகள் செயல்பாடாமல் இருந்தது. அறக்கட்டளைகள் சில தகனங்களை வைத்துள்ளனர். தகனமேடைகள் இல்லாத காரணத்தால் இந்த மயானம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
முன்பை விட தற்போது கொரோனா பரவல் குஜராத்தில் அதிகமாக இருப்பதால், அங்கிருக்கும் கிராமங்களிலும் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு என, சூரத் கலெக்டர் தவால் படேல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.