செல்போன்கள் கையிலிருக்கும் அணுகுண்டு: உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து!
- IndiaGlitz, [Thursday,March 14 2019]
பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் போன்ற கொடூரமான சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணங்களில்து சமூக வலைத்தளங்களும் ஒன்று. இண்டர்நெட் டேட்டாக்கள் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதால் அனைவரும் செல்போன் மூலமே சமூக வலைத்தளங்கள் உள்பட அனைத்தையும் பார்த்து கொள்கின்றனர். செல்போன், இண்டர்நெட்டை பெரும்பாலானோர் ஆக்கபூர்வமாக பயன்படுத்தினாலும் ஒருசிலர் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்துவதால் கடந்த சில ஆண்டுகளில் குற்றங்கள் அதிகரித்து கொண்டே போகிறது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடைபெற முக்கிய காரணமே சமூக வலைத்தளம் தான். சமூக வலைத்தளத்தை காதலுக்காகவும் காமத்திற்காகவும் பயன்படுத்தியதால் வந்த விளைவுதான் இந்த கொடூர சம்பவம். பல ஆண்டுகள் பழகியவர்களே இந்த காலத்தில் துரோகம் செய்து வரும் நிலையில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்புவதால் ஏற்படும் விளைவே இதுபோன்ற கொடூர சம்பவங்களுக்கு வழி வகுக்கின்றது.
இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்த வழக்கு ஒன்று இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது, 'மதுவும், ஆபாச படங்களும் சமூகத்தை மாசுப்படுத்தும் மிகப்பெரிய பிரச்னைகள் என்றும், செல்போனின் நன்மை, தீமை அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் நம் கையில் இருக்கும் செல்போன்கள் அணுகுண்டு போல பேராபத்தானவை என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
இனிமேலாவது செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.