40%-க்கு மேல் உயர்கின்றன செல்போன் கட்டணங்கள்..!
- IndiaGlitz, [Monday,December 02 2019]
அன்லிமிட்டெட் அழைப்புகளை மாத கட்டணத்திற்கு இலவசமாக அளித்து வந்த ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தற்போது அதற்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன. ஜியோ நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களின் அழைப்புக்களை நிமிடத்திற்கு 10 பைசா என்று ஏற்கனவே உயர்த்திய நிலையில் ஏர்டெல் வோடபோன் போன்ற மற்ற நிறுவனங்களும் தங்களது கட்டணத்தை டிசம்பர் 1 முதல் உயர்த்துவதாக அறிவித்திருந்தன.
இந்த நிலையில் நேற்று முதல் இந்த கட்டண உயர்வானது நடைமுறைக்கு வந்தது. இலவச அழைப்புக்கான அளவு நிர்ணயத்தை தாண்டி பேசுபவர்கள் இனி நிமிடத்திற்கு 6 பைசா வரை கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற நிறுவன எண்களுக்கு பேசும் பொது 1000 நிமிடங்கள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது.
வோடோபோன் ஐடியா 28 நாட்களுக்கு 179 ரூபாய்க்கு வழங்கி வந்த அன்லிமிட்டெட் சேவையை இனி 299 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது அன்லிமிட்டெட் அழைப்புக்கள் டேட்டா சேவைகள் போன்றவற்றிற்கான கட்டணத்தை 2ரூபாய் 85 காசுகளாக உயர்த்தியுள்ளது. இதனால் 28 நாட்களுக்கு 129 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இனி அது 148 ரூபாயாக உயர்கிறது. அதேபோல் டிசம்பர் 5-ம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ ஆல் இன் ஒன் திட்டத்தை தொடங்கவுள்ளது. அதில் பிற நெட்வொர்க்கிற்கு செய்யப்படும் அழைப்புக்களுக்கான கட்டணத்தை 40% வரை உயர்த்த உள்ளது.