ஒரே ஒரு எலியால் ஒரு கோடி ரூபாய் சேதம்: சிசிடிவியில் அதிர்ச்சி காட்சிகள்
- IndiaGlitz, [Thursday,August 20 2020]
ஒரே ஒரு எலியால் கார் சர்வீஸ் செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஐதராபாத்தை சேர்ந்த கார் சர்வீஸ் நிறுவனம் ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் தீ விபத்துக்கு உள்ளானது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை செய்த நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முடிவு செய்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்
இந்த நிலையில் இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தன்று அந்த நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்கள் பூஜை ஒன்றை நடத்தியுள்ளனர். அதற்காக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது
இந்த நிலையில் அலுவலகம் மூடப்படும் போது ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் அணைக்காமல் இருந்து உள்ளது. இதனை அடுத்து நள்ளிரவில் அந்த மெழுகுவர்த்தி அருகே வந்த எலி ஒன்று அந்த மெழுகுவர்த்தியை எடுத்துக் கொண்டு சென்றதாக தெரிகிறது. அந்த எரியும் மெழுகுவர்த்தியை தூக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அந்த எலி ஒரு நாற்காலி மீது போட்டுவிட்டது
இதனை அடுத்து அந்த நாற்காலி தீப்பிடித்து அதன் பின்னர் அந்த பகுதி முழுவதும் தீ பிடித்தது. முதலில் முதல் மாடியில் பரவி தீ, அதன் பின்னர் தரை தளத்திலும் பரவி ஒட்டுமொத்த அலுவலகத்தையும் தீக்கிரையாக்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்மை ஆறு மாதங்களுக்குப் பின்னர் தற்போதுதான் சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் கசிவால் இந்த விபத்து ஏற்படவில்லை என்பதும் ஒரே ஒரு எலியால் தான் கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்ட இந்த தீ விபத்து நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது