83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை ரினோஸ் அணி தோல்வி
- IndiaGlitz, [Monday,January 25 2016]
சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ஆர்யா தலைமையிலான கோலிவுட் நட்சத்திரங்களின் சென்னை ரினோஸ் அணியும், சுதீப் தலைமையிலான கன்னட திரையுலகினர்களின் கர்நாடக புல்டோசர்ஸ் அணியும் மோதியது.
இந்த போட்டியில் சென்னை ரினோஸ் அணியின் கேப்டன் ஆர்யா டாஸ் வென்றும் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக புல்டோசர்ஸ் அணியினர் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தனர். கர்நாடக அணியில் ஷர்மா 61 ரன்களும், ராஜீவ் 40 ரன்களும் ராஹுல் 39 ரன்களும் எடுத்தனர்.
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை ரினோஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முக்கிய பேட்ஸ்மேன்களான நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு, ரமணா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 'மெட்ராஸ்' பட புகழ் கலையரசன் 42 ரன்கள் அடித்தபோதிலும் சென்னை ரினோஸ் அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.