500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்தும் மறுகூட்டலுக்கு சென்ற மாணவி!
- IndiaGlitz, [Saturday,May 04 2019]
தேர்வு முடிவுகள் வரும்போது பாஸ் ஆகிவிட்டாலே மாணவர்கள் திருப்தி அடைந்து கொள்வார்கள். மொத்த மதிப்பெண்கள் குறித்து கவலைப்படவே மாட்டார்கள். ஆனால் மாணவிகளோ தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால் கவலையில் மூழ்கிவிடுவார்கள் என்ற ஜோக் பல ஆண்டுகளாக இணையதளங்களில் வலம் வருவது தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை வெளிவந்த சிபிஎஸ்இ தேர்வில் ஹன்சிகா என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று இந்தியாவிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். இருப்பினும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. அந்த ஒரு மதிப்பெண் எப்படி குறைந்தது என்று கேட்டு அவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளார். மறுகூட்டலுக்கு சிபிஎஸ்இ அனுமதிக்கவில்லை என்றால் தான் நீதிமன்றம் செல்லவும் தயாராக இருப்பதாக ஹன்சிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹன்சிகா மேலும் கூறியபோது, 'நான் தேர்வு முடிந்தவுடன் விடைகளை ஒப்பிட்டு பார்த்தேன். நிச்சயம் எனக்கு அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் கிடைத்திருக்க வேண்டும். என்னால் அந்த ஒரு மதிப்பெண்ணை விட்டுத்தர முடியாது' என்று கூறியுள்ளார்.
அவருடைய இந்த செயலுக்கு அவரது தந்தையும் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார். சட்டப்போராட்டம் நடத்தி இழந்த ஒரு மதிப்பெண்ணை அவர் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் மாணவியின் இந்த நடவடிக்கை விளம்பரத்திற்காக செய்வது போல் தெரிவதாகவும், அவர் பெற்ற மதிப்பெண்கள் அவருக்கு நிறைவான சந்தோஷத்தை தரும் என்றும் அவருடன் படித்த சக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.