போதை மருந்து கொடுத்து கொலையா? பிரபல நடிகையின் மரணத்தில் திடீர் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகையான சோனாலி போகத், கோவாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவருடைய மரணம் தொடர்பான பல திருப்பமான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
ஹரியாணாவைச் சேர்ந்த சோனாலி போகத் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துவந்தார். மேலும் சமூகவலைத் தளங்களிலும் அவர் ஆக்டிவாக இருந்துவந்ததோடு பாஜக பிரமுகராகவும் செயல்பட்டு வந்தார். அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரியாணா சட்டமன்றத் தேர்தலின்போது சோனாலி போகத், பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சோனாலி போகத் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பார்டி ஒன்றில் கலந்துகொண்டபோது திடீரென்று மயங்கி விழுந்ததாகவும் அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. சோனாலி போகத்தின் மரணம் முதற்கட்டமாக மாரடைப்பு எனக் கூறப்பட்ட நிலையில் அவருடைய உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததால் அவருடைய உறவினர்கள் பல சந்தேகங்களை எழுப்பினர். இதையடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் சோனாலி அருந்திய குளிர்பானத்தில் எம்.டி.எம்.ஏ எனும் போதைப் பொருள் அதிகளவு கலக்கப்பட்டு இருந்ததாகத் தகவல் கூறப்பட்டது. இதையடுத்து சோனாலி போகத்தின் வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கிற்கான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது சோனாலி போகத் மரணம் தொடர்பான 1000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை கோவாவில் உள்ள மாபுசா நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த அறிக்கையில் சொத்துக்காக சோனாலி போகத்திற்கு அவருடைய உதவியாளரும் நண்பர்களும் சேர்ந்து தண்ணீரில் போதைப் பொருள் கலந்து கொடுத்தாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சோனாலியின் உதவியாளர் சுதிர் சங்வரன் மற்றும் சுக்விந்தர் சிங் இருவரும் முதல் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் தண்ணீரில் போதைப்பொருள் கலந்து கொடுப்பது போன்ற சிசிடிவி காட்சிகளும் ஆதாரமாகக் காட்டப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தண்ணீரில் கலக்கப்பட்ட அதிகளவு எம்.டி.எம்.ஏ போதைப்பொருளை அருந்திய சோனாலி கழிவறைக்குச் சென்று 2 மணிநேரங்களுக்கு மேலாக வாந்தி எடுத்ததாகவும் பின்னர் உடல்நலம் குன்றிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. போதைப்பொருள் கலந்து கொடுப்பதன் மூலம் அவருடைய சொத்துகளைப் பறிக்க அவருடைய உதவியாளரும், நண்பர்களும் முயற்சித்தாக சிபிஐ தனது அறிக்கையில் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments