கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் முலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை!
- IndiaGlitz, [Friday,February 26 2021]
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். மேலம் புதிய பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது விழாவில் பேசிய தமிழக முதல்வர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களக்கு ஏற்பட்ட துயரங்களை போக்குவதற்காக பொதுமக்களுக்கு ரொக்க பணம் வழங்குதல் உள்பட பல்வேறு தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்த வருகிறது. இந்த பேரிடர் காலத்தில் இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது. தொழில் வளர்ச்சியை மேம்படுத்த புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க குடிமராமத்து திட்டம், காவிரி டெல்டா பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் திட்டம், விலையில்லா வண்டல் மண் வழங்கும் திட்டம், ஆயிரம் கோடி ரூபாயில் புதிய தடுப்பணைகள் கட்டும் திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம், அணை புணரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டம், காவிரி ஆற்றின் குறுக்கே புதிய கதவணைகள் கட்டும் திட்டம், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரபரணி-கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழக அரசு நீர் மேலாண்மையில் சிறந்த முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நீர்வளத்தை பெருக்க நீரை முறையாக பயன்படுத்த தமிழக அரசு பல்வேறு உட்கட்டமைப்புகளை புதிதாக ஏற்படுத்தியும் மேம்படுத்தியும் வருகிறது.
கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம்
கீழ்பவானி பாசன திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 401 கி.மீ நீளம் உள்ள கால்வாய்கள் நவீனப்படுத்தப்பட்டு சுமார் 2 லட்சத்து 47 ஆயிரத்து 247 ஏக்கர் பரப்பளவு பாசன நிலங்கள் பயனடையும். கீழ்பவானி பாசன திட்டம் மற்றும் பிற நீர்ப்பாசன திட்டங்களுக்கு தேவையான நிதியை பிரதமர் ஒதுக்க வேண்டும்.
தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்கள் லட்சக்கணக்கானோர் பயன்பெறும் வகையிலான கோதாவரி-காவிரி நதி நிர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும். நமாமி கங்கை வரிசையில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை புதுப்பிக்க தேவையான நிதி உதவியை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
மின்மிகை மாநிலம்
தமிழகத்தில் கோவை உள்பட 11 பெரிய நகரங்கள் சீர்மிகு நகரங்கள் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.500 கோடி மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.500 கோடி என ரூ.1000 கோடி மதிப்பிலான திட்டங்கள் ஒவ்வொரு நகரத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து சீர்மிகு நகரங்களிலும் 24 மணி நேர சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மைய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் சீர்மிகு நகரங்களில் பொதுமக்களுக்கான சேவை மேம்படும்.
பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 87 ஆயிரத்து 87 வீடுகளுக்கு ஒப்புதல் அளித்தற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமான தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.
தலா 50% நிதி பங்களிப்பு
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அளித்தது போன்று கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய-மாநில அரசுகள் தலா 50% நிதி பங்களிப்புடன் செயல்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போது சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களில் இருந்து பகல் நேர விமான சேவைகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த விமான நிலையங்களில் இரவு நேர விமான சேவைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களின் விரிவாக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கோவை வர்த்தக கேந்திரமாகவும் ஏற்றுமதி மையமாகவும் திகழ்கிறது. அதனால் துபாய்க்கு சென்று திரும்புவதற்கு நேரடி விமான சேவை வாரத்துக்கு ஒரு முறை இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.