காவிரியை பாலைவனமாக்க, கர்நாடக அரசு நயவஞ்சக முயற்சி எடுக்கிறது....! சீமான் காட்டம்...!

காவிரிப்படுகையைப் பாலைவனமாக்கும் வகையில் நடைபெறுகிற மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான் அவர்களை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்திற்கான பெரும் நீராதாரத்தைத் தரக்கூடிய காவிரியாற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைக் கட்டும் முடிவில் உறுதியாக இருப்பதாக கர்நாடக அரசு அறிவித்து அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று வெளியிடப்பட்ட ஆளுநர் அறிக்கையிலும் மேகதாது அணையைத் தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கையைத் தமிழக அரசால் எடுக்கப்படும் என்பது குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியிடாது, வெறுமனே மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று மட்டும் பொத்தாம்பொதுவாகக் கூறியிருப்பது பெருத்த ஏமாற்றமளிக்கிறது.

காவிரி நதிநீரையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தமிழகத்திலுள்ள காவிரிப்படுகை மக்களை இவ்வறிவிப்பு பெரும் கலக்கத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது. கர்நாடக அரசின் சூழ்ச்சியாலும், மத்தியில் ஆளும் அரசுகளின் பாராமுகத்தாலும் காவிரி நதிநீர் உரிமையில் பெருமளவும் இழப்பைச் சந்தித்திருக்கும் வேளையில், மேகதாதுவில் அணையும் கட்டப்பட்டுவிட்டால் தமிழகத்திற்கு முழுவதுமாக காவிரி நதிநீர் மறுக்கப்படும் பேராபத்து நிகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தற்போதையச் சூழலில் மேகதாது பகுதியில் அணைக்கட்டுவதற்காக 9,000 கோடி மதிப்பீட்டிலான கட்டுமானப்பொருள்களை கர்நாடக அரசு குவித்துவரும் செய்தியறிந்து தமிழக விவசாயிகள் பெருங்கவலை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, கர்நாடகாவின் எதேச்சதிகாரப்போக்கினால் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகளால் தமிழகத்திற்கு இயற்கையாக வரவேண்டிய நதிநீர் தடுத்து வஞ்சிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்திலுள்ள அவ்வணைகள் நிரம்பிய பிறகு, வரும் உபரிநீரை மட்டுமே திறந்துவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது அம்மாநில அரசு. இதனால், உலக நதிநீர்ப்பங்கீட்டு விதிகளின்படி, தமிழகத்திற்கு இருக்கும் தார்மீக உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு, வெறுமனே வடிகால் நிலமாக தமிழகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் எனச் சனநாயகத்தின் எந்த அமைப்பின் உத்தரவுக்கும் கட்டுப்படாது, தமிழகத்திற்கு வர வேண்டிய நீரை மறுத்து அட்டூழியப்போக்கை அரங்கேற்றி வரும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணையைக் கட்டினால், தமிழகத்திற்கு எக்காலத்திலும் காவிரி நதிநீர் இனி சொந்தமில்லை எனும் நிலை உருவாகும்; காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பான 177 டி.எம்.சி. என்பது எக்காலத்திலும் சாத்தியப்படாத கொடுஞ்சூழல் ஏற்படும். தற்போது கிடைக்கக்கூடிய சொற்ப அளவிலான நீரும் கானல் நீராகி, தமிழக விவசாயிகளின் எதிர்காலமே இருள் சூழ்ந்ததாக மாறிவிடும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமல் அணை கட்டுவது தவறு என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்து மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு இடைக்காலத் தடைவிதித்திருந்தது. இந்நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த கர்நாடக அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பினை வழங்கி, இடைக்காலத்தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது டெல்லியிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம். இதனை அடிப்படையாகக் கொண்டுதான், மேகதாதுவில் அணைக்கட்டப்படும் என மீண்டும் உறுதிப்படக் கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. மேகதாதுவில் அணைக்கட்ட முயலும் கர்நாடக அரசு, தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவினால் அணைக்கட்டும் முயற்சியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இது காவிரி நதிநீர் உரிமை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த பெரும் பின்னடைவாகும். தமிழக அரசு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையான வாதங்களை வைக்கத் தவறியதன் காரணமாகவே கர்நாடகாவிற்குச் சாதகமாக இத்தகைய தீர்ப்பு வந்துள்ளது என்பதன் மூலம் தமிழக அரசின் அலட்சியப்போக்கையும், அக்கறையின்மையையும் உணர்ந்துகொள்ளலாம்.

காவிரி நதிநீர்ப்பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி, தமிழக அரசு அனுமதி இல்லாமல் காவிரியாற்றின் குறுக்கே அணைக்கட்டக்கூடாது எனும் உத்தரவுக்கு மாறாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெற கர்நாடக அரசு விண்ணப்பித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு எனக்கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இவ்வழக்கில் தமிழக அரசு எடுத்து வைக்கும் வலுவான வாதங்களில் மூலம்தான் தமிழகக் காவிரிப்படுகை விவசாயிகளின் எதிர்காலமே காக்கப்படும் என்பதால், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்காடு செய்தலைப் போல அல்லாது, இதில் சீரியக் கவனமெடுத்து செயல்பட்டு வழக்கில் வென்று, கர்நாடக அரசின் மேகதாதுவில் அணைக் கட்டும் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் அவர்கள் கூறியுள்ளார்.

 

More News

மன்மத கொள்ளையன் முத்து சங்கு....! ஆபாச ஆபிசருக்கு ஆப்பு வைத்த மனைவி...!

மற்ற பெண்களிடம் உல்லாசமாகவும், தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் காவலர் மீது மனைவி புகாரளித்துள்ளார்.

கோடிகளில் புரண்ட மதன் சேனல்களின், காத்து வாங்கும் நிலை....! மாஸ் காட்டிய காவல்துறை....!

பப்ஜி மதனின் யுடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதையடுத்து, சென்னை காவல் துறையினர் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.

ஏ.எல்.விஜய்யின் 'தலைவி' சென்சார் தகவல்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தலைவி'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்

என் அன்புத் தம்பி விஜய்: கமல்ஹாசனின் பிறந்த நாள் வாழ்த்து!

என் அன்பு தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என உலக நாயகன் நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

உலக அளவில் இரண்டாவது இடம் பிடித்த 'பீஸ்ட்': ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்திற்கு 'பீஸ்ட்' என பெயர் வைக்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் தெரிந்தது