காவிரிக்காக ஐபிஎல் போட்டியை தடை செய்யலாமா?: ஆதரவும் எதிர்ப்பும்
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட் போட்டிகளில் அவ்வபோது அரசியல் குறுக்கிடுவது வழக்கமான ஒன்றே. கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் பிரச்சனை தீவிரமாக இருந்தபோது அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட கூடாது என்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஐபிஎல் நிர்வாகத்தின் உத்தரவின்படி சென்னை போட்டியில் இலங்கை வீரர்கள் விளையாடவில்லை. அதேபோல் இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் பிரச்சனையாலும் பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது காவிரி பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும்போது ஐபிஎல் போட்டி ஒரு கேடா? என்றும், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ஒருசில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னையில் நடைபெறும் போட்டியை நிறுத்துவதை விட போட்டியை பார்க்க மைதானத்திற்கு யாரும் செல்லாமல் இருந்தால் நிச்சயம் காவிரி பிரச்சனை உலகின் கவனத்திற்கு செல்லும் என்பதும் இதனால் மத்திய அரசுக்கு நிச்சயம் ஒரு நெருக்கடிதான் என்பதும் ஏற்று கொள்ளத்தக்க ஒன்றே ஆகும். ஆனால் சென்னையில் நடைபெறும் போட்டியை நிறுத்தினால் வேறு இடத்திற்கு ஐபிஎல் போட்டியை நிர்வாகம் மாற்றியமைக்கும். இதனால் யாருக்கு என்ன லாபம் என்பதை அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
அதே நேரத்தில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. அதை அரசியலுடன் கலக்ககூடாது என்பதும் ஒருசிலரின் கருத்தாக உள்ளது. காவிரி பிரச்சனைக்காக போராட்டம் நடத்த எத்தனையோ வழிகள் இருக்கும்போது ஒரு போட்டியை நிறுத்துவதால் காவிரி பிரச்சனை தீர்ந்து விடுமா? என்ற கருத்தும் ஒருசாரரிடம் இருந்து வருகிறது. ஒருசில அரசியல்வாதிகளும், லட்டர்பேட் கட்சியினர்களும் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்க கூடாது என்பதும் அவர்களுடைய கருத்தாக உள்ளது.
மொத்தத்தில் ஒரு மாநிலமே வாழ்வாதார பிரச்சனைக்காக போராடி வரும் நிலையில் கிரிக்கெட் போட்டியை உதாசீனப்படுத்துவது தவறில்லை என்பதே பெரும்பான்மையோர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும் இந்த போட்டியை பயன்படுத்தி காவிரி பிரச்சனையை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நல்ல வாய்ப்பை தமிழக மக்கள் பயன்படுத்த வேண்டுமே அன்றி, அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளின் பிடியில் விழுந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments