ஊடகவியலாளர் துரைமுருகனை கைது செய்தது அரசியல் காழ்புணர்ச்சியே...! சீமான் காட்டம்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன் மற்றும் நால்வரை கைது செய்தது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் என்று, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர், சாட்டை என்ற பிரபல யூடியூப் சேனலை நடத்தி வரும் துரைமுருகன் என்பவரை பல்வேறு வழக்குகளின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.
திருச்சியில் வினோத் என்பவர் விடுதலை புலிகள் தலைவர் பிரகாரன் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதையடுத்து அவரை நேரில் சந்தித்து சமூகவலைத்தளங்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என துரைமுருகன், திருச்சி மேற்கு தொகுதியில் நாம் தமிழர் சார்பாக போட்டியிட்ட வினோத், நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ் குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் கோபமடைந்த வாகன பழுது நீக்கும் மைய உரிமையாளர் வினோத் இவர்கள் குறித்து புகாரளித்ததை தொடர்ந்து, இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். மற்ற இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நால்வரை கைது செய்ததற்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது,
"தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு. இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார். சீமானின் கண்டனத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout