நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகான் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். இந்த உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக சிலர் சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தனர். ஆனால் இதற்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்து இருந்தனர். எனினும் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கொடுத்த நேர்காணலில் தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வடபழனி காவல் நிலையத்தில் கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ் அளித்த புகாரின்பேரில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதாவது, கலகம் செய்ய தூண்டி விடுதல், உயிருக்கு ஆபத்தான தொற்று பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல், பேரிடர் மேலாண்மைச் சட்டம், தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் நடிகர் மன்சூர் அலிகான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த முன் ஜாமீன் மனுவில் நான் “கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று சொல்லவில்லை. தடுப்பூசியை போடுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் சொன்னேன்” என விளக்கம் அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments