அமெரிக்காவின் முதல் Powerpuff Girl… துணை அதிபரை வாழ்த்தி மகிழும் கார்ட்டூன நெட்வொர்க்!!!

 


அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் முதல் கறுப்பு மற்றும் தெற்காசிய பெண் என்ற வகையில் பலரும் மகிழ்ச்சி பொங்க பாரட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு இவர் இந்திய அமெரிக்கர் என்ற வகையிலும் புதிய வரலாறு படைத்துள்ளார். இவருக்கு சிறப்பு செய்யும் விதமாக கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் தன்னுடைய பிரபலமான Powerpuff Girl சித்திரத்தை கமலா ஹாரிஸ்க்கு வழங்கி பெருமை சேர்த்து இருக்கிறது.

கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் வரும் Powerpuff Girl எனும் சித்திரம் பெண்ணின் வலிமையை நிரூபிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். அந்த சித்திரத்தில் தற்போது கமலா ஹாரிஸ் ஜொலிக்கிறார். வெள்ளைநிற காலணிகள், நீலநிறத்தில் இருக்கும் கப்பற்படையினருக்கான சீருடை, அதில் அமெரிக்காவின் பேட்ஜெட் என ஒரு வலிமையான பெண்ணுக்கான அனைத்து அடையாத்தையும் அந்தக் கார்ட்டூன் சித்திரம் எடுத்துக் காட்டுகிறது.

“கமலா ஹாரிஸ் மேடம்… துணை ஜனாதிபதி“ எனக் குறிப்பிட்டு இருக்கும் இந்தச் சித்திரம் அவரின் ஆளுமையை எடுத்துக் காட்டுவதற்காகவும் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகவும் அமையும் என கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் And Just like that she spoke என்று தொடங்கி Thank you for being and Inspiration for girls everywhere என்று ஒரு குறிப்பையும் அந்தச் சித்திரத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்தச் சித்திரத்தை கார்ட்டூன் நெட்வொர்க் தன்னுடைய அதிகாரப்பூர்வமான டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள கமலா ஹாரிஸின் உறவினர்கள் அவருடைய பதவியேற்பு விழாவிற்கு செல்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்ற ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. முன்னதாக அட்டர்னி ஜெனரலாக அவர் பதவியேற்ற கொண்டபோது அவரின் தாய்வழி மாமாவான கோபாலன் பாலச்சந்திரன் கலந்து கொண்டார். அதேபோல தற்போதும் இவர் அமெரிக்காவிற்கு செல்வார் எனக் கூறப்படுகிறது. மேலும் அவரின் சித்தி டாக்டர் சரளா கோபாலன், சகோதரி சியாமளா அகியோரும் அமெரிக்காவிற்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.