தலைமுறைகளை கடந்த தலைசிறந்த பாடகர்: கேப்டன் விஜயகாந்த்
- IndiaGlitz, [Friday,September 25 2020]
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், எஸ்பிபி மறைவு குறித்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
உடல் நலக்குறைவால் காலமான திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவு தன்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார் என்ற செய்தி தன்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. திரைப்பட பின்னணி பாடகர், நடிகர், இசை அமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட அவர், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளையும், 6 முறை தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
இசைக்கு மொழி கிடையாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் எஸ்.பி.பி, திரையுலகில் எம்.ஜி.ஆர். - சிவாஜி, தான் நடித்த படங்களில் மிகச்சிறப்பாக பாடிய படங்கள் சின்னகவுண்டர், செந்தூரப்பாண்டி, அம்மன் கோயில் கிழக்காலே, போன்ற படங்களிலும், ரஜினி கமல் மற்றும் அஜீத், விஜய் - சூர்யா என தலைமுறைகளை கடந்து அனைத்து நடிகர்களுக்காகவும் பாடிய தலைசிறந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தனது இனிய குரலால் அனைத்து தரப்பினரின் இதயங்களையும் கொள்ளை கொண்ட எஸ்பி.பியின் மறைவு திரைத்துறையினர் மட்டுமல்லாது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்றால் அது மிகையல்ல.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தான் சார்ந்த திரையுலகினர் என அனைத்து தரப்பினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எஸ்.பி.பி.யின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.