மண்ணின் மைந்தர் சண்முகப்பாண்டியனின் 'மதுரவீரன்'
- IndiaGlitz, [Monday,August 07 2017]
கோலிவுட் திரையுலகில் பல அதிரடி ஆக்சன் வெற்றி படங்களை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். போலீஸ் உடைக்கு பொருத்தமானவர், அவரது படங்களில் சண்டைக்காட்சிகளில் அனல் தெறிக்கும். காதல், மோதல், செண்டிமெண்ட் என அத்தனை உணர்வுகளையும் மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்துபவர். அப்படிப்பட்ட கேப்டன் விஜயகாந்த்தின் கலையுலக வாரீசான சண்முகப்பாண்டியன் நடித்த முதல் படமான 'சகாப்தம்' எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் திரைக்கதையில் இருந்த ஓட்டை.
இந்த நிலையில் சண்முகப்பாண்டியனின் அடுத்த படமான 'மதுரவீரன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. முதல் படத்தில் செய்த தவறை இந்த படத்தில் செய்யாமல் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை விஜயகாந்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்காமல் V.ஸ்டிடியோஸ் மற்றும் பி.ஜி. மீடியா வொர்க்ஸ் தயாரிப்பதில் இருந்தே விஜயகாந்த் உள்பட யாருடைய தலையீடும் இந்த படத்தில் இருக்காது என்பது உறுதியாகிறது.
விஜயகாந்தின் ஆரம்பகால படங்கள் பல கிராமிய மணத்துடன் வந்ததால் அவரது மகன் சண்முகப்பாண்டியனும் அதே களத்தில் இறங்கியுள்ளார். சண்முகப்பாண்டியனின் பலம் சண்டைக்காட்சிகள் என்பதும் தந்தையை மிஞ்சும் வகையில் முறையாக சண்டை பயிற்சி பெற்றுள்ளவர் என்பதையும் சரியா புரிந்து கொண்டு இயக்குனர் பி.ஜி. முத்தையா இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளை விட ஆக்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, ஜி.மாரிமுத்து ஆகிய அனுபவம் வாய்ந்த நடிகர்களும், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன் போன்ற நகைச்சுவை நடிகர்களும் இந்த படத்திற்கு ப்ளஸ் ஆக இருப்பார்கள். இனிமே இப்படித்தான், கட்டப்பாவை காணோம் போன்ற படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் தயாநிதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் 'மதுரவீரன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பார்த்தாலே அது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரமான 'ஜல்லிக்கட்டு' குறித்த கதை என்பது தெரியவருகிறது. சமீபத்தில் வெளியான டிரைலர் அதை உறுதி செய்தது. ஜல்லிக்கட்டுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் இணைந்து போராடி அதில் வெற்றியும் பெற்றுள்ளதால் அதை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலிவுட்டில் இப்போதைக்கு உயரமான நடிகர் சண்முகப்பாண்டியன் தான். 6.4 அடி இருக்கும் அவர், நடிப்பிலும் இந்த படத்தின் மூலம் உயர்ந்து இந்த மண்ணின் மைந்தர் என்பதை நிரூபிப்பார் என்று நம்புவோம்.