கோழிக்கோடு விமான விபத்து: உயிரிழந்த விமானியின் வீரமரணம் அடைந்த குடும்பம்!

  • IndiaGlitz, [Saturday,August 08 2020]

நேற்று இரவு சுமார் 7.30 மணிக்கு துபாயில் இருந்து 191 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென விபத்துக்குள்ளானது. ரன்வேயில் இருந்த தண்ணீர் காரணமாக விமான சக்கரங்கள் வழுக்கியதால் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக முதல் கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த விபத்தில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இந்த விமான விபத்தில் விமானம் இரண்டாக உடைந்த போதிலும், விமானம் தீ பிடிக்காமல் இருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு விமான கேப்டன் செய்த சமயோசிதமான செயலே காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது

இந்த விமானத்தை ஓட்டி வந்த கேப்டன் வசந்த் சாத்தே என்பவர் விமானம் தரையிறங்கியபோது வழுக்கி சரிந்து வருவதைக் கண்டதும் உடனடியாக சுதாரித்து விமானத்தின் இன்ஜினை ஆப் செய்துள்ளார். இதனால் விமானம் இரண்டாகப் பிளந்தும் தீ பிடிக்காமல் தவிர்க்கப்பட்டது. இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சமயோசிதமாக செயல்பட்டு அவர்களின் உயிர்களை காப்பாற்றிய கேப்டன் வசந்த் சாத்தே இந்த விபத்தில் உயிரிழந்தார் என்பது சோகமான செய்தி ஆகும்

கேப்டன் வசந்த் சாத்தே அவர்கள் ஒரு முன்னாள் இந்திய விமானப்படை பைலட் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்று இவரது சகோதரர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவரது தந்தையும் ஒரு ராணுவ வீரர் என்பதும் அவர் கடந்த 1971-ஆம் ஆண்டில் நடந்த இந்திய-வங்கதேச போரில் கலந்து கொண்டவர் என்பதும் இந்த போரில் அவரும் வீரமரணம் அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் வசந்த் சாத்தே அவர்களின் குடும்பத்தினர் அனைவருமே நாட்டிற்காக வீரமரணம் அடைந்தவர்கள் என்ற தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை அளித்து அளித்துள்ளது