டிக்டாக் தடையோடு கணக்கு முடியல… பப்ஜி உள்ளிட்ட பெரிய லிஸ்டே இருக்கு… பரபரப்பு தகவல்!!!
- IndiaGlitz, [Monday,July 27 2020]
கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருந்து வரும் எல்லைப் பிரச்சனையில் இன்னும் தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் எல்லைத் தகராறில் ஏற்பட்ட முரண்பாடு அடுத்து பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட வேறுத்தளங்களில் புகைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கும் தகவல்களுக்கும் அச்சுறுத்தல் எற்படும் வகையில் செயல்படுவதாக் கூறி கடந்த ஜுன் 26 ஆம் தேதி மத்திய அரசு 59 சீனச் செயலிகளுக்கு தடை விதித்தது. அதில் டிக்டாக், யுஜி பிரவுசர் உள்ளிட்ட பல பிரபலமான செயலிகளும் இருந்தன.
டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருந்த நிலையில் அதற்கு மாற்றான செயலிகள் தற்போது இந்தியாவில் தொடங்கப் பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் சிங்காரி என்ற புது ஆப்பை மட்டும் கடந்த சில தினங்களில் 2.3 கோடி பேர் பதிவிறக்கம் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி பதிவிறக்கம் செய்யும் பல ஆப்கள் சீனச் செயலிகளாக இருப்பதால் மேலும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சீனச் செயலிகள் பாதுகாப்பற்றவை எனக் கருதி மத்திய அரசு 59 சீனச் செயலிகளுக்கு தடை விதித்து இருக்கிறது.
இந்நிலையில் தற்போது பதிவிறக்கம் செய்யப்படுவதாகக் கருதப்படும் சீனச் செயலிகளுக்கும் தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் பப்ஜி உள்ளிட்ட 275 சீனச் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இதில் பப்ஜி, ஜியோமி, அலி எக்ஸ்பிரஸ், ஸில்லி போன்ற நிறுவனங்களின் ஆப்களுக்கு இந்தியாவில் தடை விதக்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.