புற்று நோய் குறித்து புற்று நோயில் இருந்து மீண்ட பிரபல நடிகை கூறிய கருத்து
- IndiaGlitz, [Friday,November 13 2015]
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பம்பாய்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மனீஷா கொய்ராலா அதன் பின்னர் இந்தியன், முதல்வன், ஆளவந்தான், மும்பை எக்ஸ்பிரஸ், மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா, பின்னர் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து மீண்டும் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடரவுள்ளார்.
இந்நிலையில் மலையாளத்தில் 'இடவப்பாதி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மனிஷா கொய்ராலா, இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய மனிஷா, " புற்று நோய் வந்தால் மரணம் உறுதி என்று பெரும்பாலானோர் கருதுவதுவது தவறு என்றும் சினிமாக்களில் புற்று நோயாளிகள் இறப்பது போன்று காட்ட வேண்டாம் என்றும் புற்று நோயைக் குணமாக்க வேண்டும் என்ற சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும் என்றும் கூறினார்.
மேலும் சகிப்புத்தன்மை குறித்து மனிஷா கூறியபோது, "இந்தியாவில் உள்ள அனைவரும் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்று கூறிடமுடியாது. எப்படி வாழவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இந்தியர்கள் பெரிய கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள். அது இப்போதும் தொடருகிறது' என்று கூறினார்.