இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நீங்கள் இரண்டு பேர்தான்..! அமெரிக்கா ஈரானை வறுத்தெடுத்த கனடா பிரதமர்.
- IndiaGlitz, [Tuesday,January 14 2020]
ஈரான் - அமெரிக்காவுக்கு இடையில் தொடர்ந்து நிலவி வரும் போர்ப் பதற்றம், உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் உரசல் போக்கால், ஈரானில் பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு, அதில் பயணித்த அனைவரும் இறக்க நேரிட்டது. இதனால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், “இரு நாடுகளும் தற்போது நிலவும் நிலைக்குக் காரணமாகும்,” என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை யாரும் எதிர்பாராத விதமாக அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின் பேரில் கொன்றது அந்நாட்டு ராணுவம். அதைத் தொடர்ந்து ஈரான், ஈராக்கிலிருந்த அமெரிக்க ராணுவத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் நடந்த அதே நாளில், ஈரானிலிருந்து உக்ரைனுக்கு சென்று கொண்டிருந்த உக்ரைனின் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 176 பேரும் மரணமடைந்தார்கள். அதில் 57 கனட நாட்டுக் குடிமக்களும் அடங்குவர்.
உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் ஈரானின் பங்கு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. அதிபர் ட்ரம்ப் மட்டுமல்லாமல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடும், “உக்ரை விமான விபத்துக்கு ஈரான் காரணமாக இருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது,” எனறார். இதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் ஈரான், “உக்ரைன் விமானத்தைத் தவறுதலாக நாங்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டோம்,” என்று பகீர் கிளப்பும் விளக்கத்தைக் கொடுத்தது. இதனால் பிரச்னை பூதாகரமாகியுள்ளது.
இந்நிலையில் இந்த சூழல் குறித்து ட்ரூப், “இரு நாட்டுக்கும் இடையில் பதற்றநிலை இருக்கவில்லை என்றால், இன்று அந்த கனட குடிமக்கள் அவர்களது குடும்பங்களோடு வீட்டில் இருந்திருப்பர்.
ஈரான், அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் தெளிவாக இருக்கின்றன. அதே நேரத்தில், அங்கிருக்கும் பதற்றநிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கைகளும் காரணமாகத்தான் இருக்கின்றன,” என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.