இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருமை சேர்த்த கனடா மேயர்: வைரலாகும் புகைப்படம்!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கனடாவை சேர்ந்த மேயர் ஒருவர் அந்நாட்டிலுள்ள தெரு ஒன்றுக்கு ஏஆர் ரஹ்மான் தெரு என பெயர் சூட்டி உள்ளார்.

நம்மூரில் உள்ள தெருக்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் வைக்கப் படுவது போல் கனடாவில் உள்ள ஒரு தெருவுக்கு ஏஆர் ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள மார்க்கம் என்ற நகரத்தில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது என அந்நகரின் மேயர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஆர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் ’மார்க்கம் மேயர் அவர்களின் இந்த மரியாதை தனக்கு மிகவும் பெருமையாகவும் மதிப்புக்குரியதாக இருக்கிறது என்றும் அவருக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு ஏஆர் ரஹ்மான் தெரு என கனடாவின் இன்னொரு தெருவுக்கு பெயர் சூட்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவருடைய பெயர் ஒரு தெருவுக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஆர் ரகுமான் இசையில் உருவான ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் இசையமைத்த ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் பாடல்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து செப்டம்பர் 6ஆம் தேதி ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளது என்பதால் ஏஆர் ரஹ்மானின் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இசை விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.