கனடாவில் துப்பாகி சூடு நடத்திய மர்ம நபர்: பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் பலி
- IndiaGlitz, [Monday,April 20 2020]
கனடாவில் போலீஸ் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். ஆனால் கனடா மட்டுமே கொரோனா வைரஸை ஓரளவுக்கு கட்டுப்படுத்திய நாடாக கருதப்படுகிறது. இந்த நிலையில் கனடாவில் நேற்று இரவு திடீரென மர்ம நபர் ஒருவர் போலீஸ் உடையணிந்து போலீஸ் காரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வந்தார். காரை விட்டு இறங்கிய அவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக பொதுமக்களை நோக்கி சுட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் பலியாகினர்
இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக அந்த பகுதிக்கு வந்த போலீசார், மர்ம நபர் மீது எதிர்தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர். துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் பெயர் கேப்ரியல் என்பதும் 51 வயதான அவர் ஒரு பல் டாக்டர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது
இந்த நிலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியான பெண் போலீஸ் அதிகாரியின் பெயர் ஹெய்டி ஸ்டீவன்சன் என்றும் அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர் என்றும் துப்பாக்கி சூடு நடந்த நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் என்பீல்ட் என்ற பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. பெண் போலீஸ் அதிகாரி ஹெய்டி அவர்கள் இந்த துப்பாக்கி சூட்டில் பலியாகி இருப்பது அவரது குடும்பத்தினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.