சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
- IndiaGlitz, [Friday,October 13 2017]
சபரிமலை ஐயப்பன் கோவிலில், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது
இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த வழக்கு குறித்து புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும், அந்த அமர்வு இதுகுறித்த இறுதி முடிவை அறிவிக்கும் என்று சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.