கொரோனாவுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை பலனளிக்குமா??? உலகநாடுகளில் நடந்துவரும் ஆய்வுகள் என்ன!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோயைக் குணப்படுத்துவதற்கு இதுவரை முழுமையான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. தடுப்பூசிகளும் பரிசோதனை நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், இன்டர்ஃபிரான் போன்ற மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர Remdsivir, ritonavir/lopinavir போன்ற மருந்துகளும் சோதனையில் உள்ளன. இப்படியான நெருக்கடியில் பல நாடுகள் குணமடைந்த கொரோனா நோயளிகளிடமிருந்து அவர்களது பிளாஸ்மாக்களை பெற்று கொரோனாவிற்கு சிகிச்சை அளித்தும் வருகின்றன. ஆனால் மேற்கண்ட எந்த மருந்துகளிலும் உறுதியாக கொரோனா குணமடையும் என்ற நம்பிக்கையை மருத்துவ உலகம் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீனா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனா நோய் சிகிச்சைக்கு ஸ்டெம் செல் (Stem cell theraphy) சிகிச்சை பலனளிக்குமா என்ற ரீதியிலான பரிசோதனையைத் தொடங்கி இருக்கின்றன. இப்படி ஆய்வு ரீதியில் ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்பட்ட சில கொரோனா நோயாளிகள் குணமடைந்த செய்திகளும் வெளியாகி இருக்கிறது. எனவே அண்மையில் வெற்றி பெற்ற பிளாஸ்மா சிகிச்சை போன்று ஸ்டெம் செல் சிகிச்சையையும் கொரோனாவுக்கு பயன்படுத்தலாமா என்று விஞ்ஞான உலகம் சிந்தித்து வருகிறது.
மனித உயிரானது ஒரு செல்லில் இருந்து ஆரம்பிக்கிறது. கருவுற்றபோது ஒரு செல்லாக இருக்கும், அதுவே வளர்ந்த நிலையில் 37 லட்சம் கோடி செல்களாக அவை பரிணாமம் அடைகிறது. அப்படி வளர்ச்சி அடைந்தாலும் மனிதத் தன்மைக்கான அடிப்படை ஆதாரமாக சில செல்கள் மனித உடலில் காணப்படுகின்றன. அவை ஸ்டெம்செல்கள் என அழைக்கப்படுகிறது. கருமுட்டை, ரத்தம், எலும்பு மஜ்ஜை, தொப்பு கொடி, நச்சுக்கொடி, தசை ,தோல், கொழுப்பு திசு, கல்லீரல், கணையம், மூளை போன்ற பல இடங்களில் ஸ்டெம் செல்கள் காணப்படுகின்றன. இந்த ஸ்டெம் செல்களைத் தேவையான அளவுக்குப் பிரித்து எடுத்து அதை ஆய்வகத்தில் வளர்த்து (Cluture Medium) மனித உடலுறுப்புகளுக்குத் தேவையான செல்களாகவும் மாற்ற முடியும். அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கவும் முடியும்.
ஸ்டெம்செல் சிகிச்சை
உடலிலுள்ள செல்களில் ஏதேனும் குறைபாடு அல்லது நோய் வந்தால் அதைச் சரிசெய்ய புதிய ஸ்டெம் செல்களைப் புகுத்தி புத்துயிர்ப்பு ஏற்டுத்தும் சிகிச்சை முறைக்கு ஸ்டெம்செல் சிகிச்சை என்று பெயர். இந்த சிகிச்சை முறையினால் உடலில் பழுதான பல உறுப்புகளை குணப்படுத்த முடியும். புற்றுநோய், நரம்பு நோய்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகவும் பலனளிக்கிறது என மருத்துவ உலகம் கூறுகிறது.
பொதுவாக, கொரோனா போன்ற வைரஸ் கிருமிகள் நோய்த்தொற்றை ஏற்படுத்தும்போது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் இன்டர்ஃபெரான், இன்டர்லுயூக்கன் போன்ற நோய் எதிர்ப்பு புரதங்களைச் (சைட்டோகைன்) சுரந்து நோய்க்கு எதிராக கடுமையாகப் போராடும். அனைத்து நோயிலும் இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது என்றாலும் கொரோனா விஷயத்தில் சில சிக்கலையும் இது ஏற்படுத்தி விடுகிறது. கொரோனா நோய்த்தொற்று முதலில் ஒருவரது சுவாச உறுப்புகளைத் தாக்கி அழிக்கிறது. ஏற்கனவே நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்போது நமது நோய் எதிர்ப்பு மண்டலமும் கொரோனா வைரஸ்க்கு எதிராக, நோய் எதிர்ப்பு புரதங்களைச் சுரப்பதால் நுரையீரலில் நீர்க் கோர்த்து கட்டிகள் தோன்றி விடுகின்றன. கொரோனா சிகிச்சையில் இந்தப் பாதிப்பு பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுவதால் Tocilizumab மருந்து பயன்படுத்தப் படுகிறது. ஆனாலும் இது முழுமையான பயனைத் தருவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா சிகிச்சையில் அதிகபடியான நோய் எதிர்ப்பு சுரப்பிகள் இருந்தாலும் சிக்கல், நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாவிட்டாலும் சிக்கல்தான். இந்நேரத்தில் ஸ்டெம் செல் ஒரு மிகச்சிறந்த சிகிச்சையாக உதவும் எனத் தற்போது விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தச் சிகிச்சைக்கு நச்சுக்கொடி அல்லது தொப்புள் கொடியில் உள்ள “மீசென்கைம்” ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுத்து அவற்றை ஆய்வகத்தில் வைத்து வளர்த்து உடலுக்குள் செலுத்தப்படும். இந்த ஸ்டெம்செல்கள் மனித உடலுக்குள் சென்ற உடனே வேலை செய்வதும் இல்லை. முதலில் கொரோனா நோயினால் மனித உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை கண்டறிந்து அவற்றிற்கு ஏற்பவே இந்த ஸ்டெம்செல்கள் வேலை செய்யும். முதலில் அதிகபடியான நோய் எதிர்ப்பு புரதங்களை இது கட்டுப்படுத்துகிறது. அடுத்து அமினோ அமிலங்களை சுரந்து உடலில் புதிதாக பல செல்களை உற்பத்தி செய்து உடலை நோயில் இருந்து முழுமையாக மீட்கிறது.
ஸ்டெம் செல் சிகிச்சையில் நுரையீரல் முழுவதும் சேதமடைந்து வென்டிலேட்டர் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் கூட மிக எளிதாக உயிர் பிழைத்துவிட முடியும். இந்தச் சிகிச்சையில் உடல் முழுவதும் புது செல்கள் உற்பத்தி செய்யப்படுவதால் ஆக்ஸிஜன் அளவும் சீர் செய்யப்படுகிறது. ரத்த ஓட்டமும் சீர் செய்யப் படுகிறது. தற்போது அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிற ஸ்டெம் செல்களுக்கு Remestemcel-L என்று பெயர். இஸ்ரேலில் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிற ஸ்டெம் செல்களுக்கு Pluristem என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரேலின் கணக்குப்படி ஒரு நச்சுக்கொடியில் இருந்து பெறப்படும் ஸ்டெம் செல்களை வைத்து 20 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த எண்ணிக்கையைப் பார்க்கும் போது ஒட்டு மொத்த உலக நாடுகளும் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது.
ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கும் இந்த சிகிச்சை முறையை மேலும் அதிகப்படுத்தவும் இதுகுறித்த ஆய்வினை மேற்கொள்ளவும் பல நாடுகள் தற்போது தீவிரம் காட்டிவருகிறது. இதிலுள்ள சாதக நிலைமைப் பற்றியே இதுவரை தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கிறது. பாதக நிலைமை, பொருளாதார காரணிகள் குறித்த செய்திகள் வெளிவரும் பட்சத்தில் கொரோனா நோய்க்கு இது எந்த அளவு பயன்படும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com