கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா???
- IndiaGlitz, [Friday,May 08 2020]
கொரோனா வைரஸ் பரவல் உலக மக்களை கடும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. என்ன செய்தால் கொரோனா பரவாமல் இருக்கும் என இணையதளத்தில் தேடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா சிகிச்சைக்கு மருத்துவர்கள் என்ன மருந்துகளை பயன்படுத்துகிறார்கள்? தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என்ற கேள்விb தற்போது பொது மக்களையும் துளைத்தெடுத்து வருகிறது. இந்நிலையில் உலகத் தலைவர்களின் கருத்துகள், விஞ்ஞானிகளின் கருத்துகள், சமூக வலைத்தள வதந்திகள் என அனைத்தையும் பிரயோகித்து பார்த்து விடுவது எனச் சிலர் சிக்கலில் மாட்டிக்கொள்ளவும் செய்கின்றனர்.
கொரோனாவிற்கு முறையான சிகிச்சை மருந்துகளும் தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கபடாத நிலையில் கொரோனாவில் இருந்துத் தப்பித்துக் கொள்ள சிலர் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலான பாக்டீரியாவினால் பரவும் நோய்த் தொற்றுகளுக்கு மருத்துவர்கள் ஆண்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளையே பரிந்துரைக்கின்றனர். எனவே கொரோனா வைரஸ்க்கும் இந்த மருந்துகள் குறைந்த பலனையாவது கொடுக்கும் எனக் கருதி பல நாடுகளில் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆண்டிபயாடிக் (Antibiotic) – என்பது நுண்ணுயிரி எதிர்ப்பிகள். இதனால் பாக்டீரியாவை மட்டும் தான் கொல்ல முடியும். வைரஸை கொல்ல முடியாது என்ற அடிப்படை அறிவியலை மக்கள் மறந்து விடுகின்றனர். அடிப்படையில் பாக்டீரியாக்களும் வைரஸ்களும் நிறைய வேறுபாடு உண்டு. மனித உடலுக்குள் புகுந்து பல்லாயிரக்கணக்காக பிரதி எடுப்பதற்கும் இரண்டு நோய்கிருமிகளும் வெவ்வேறான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. எனவே பாக்டீரியாவிற்கு எதிராகப் பயன்படுத்தும் ஆண்டிபயாடிக்கால் கொரோனா வைரஸை அழிக்க முடியாது. வைரஸை தாக்கி அழிக்கும் வல்லமை ஆண்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளுக்கு இல்லை பல நாட்டு மருத்துவர்கள் தற்போது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், கொரோனா சிகிச்சையிலும் இது பலனளிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற தவறான புரிதலால் மக்கள் இந்த மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிய வருகிறது.
மேலும், “கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புக்கு ஆண்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக் கூடாது” என WHO முன்னதாகவே தெளிவுபடுத்தியிருக்கிறது. பாக்டீரியாவினால் தோன்றும் நோய்த்தொற்றுக்கு மட்டுமே இந்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் எனவும் கூறியிருக்கிறது. ஆனால் கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்துகளை தீவிர கண்காணிப்புக்கு பயன்படுத்தலாம் எனவும் WHO குறிப்பிட்டு இருக்கிறது.