ஐபிஎல் திருவிழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா!
- IndiaGlitz, [Wednesday,October 21 2020] Sports News
இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதள பாதாளத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்று என்பது ப்யூஸ் போன பல்பூ ஒளிரும் அளவுதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் ஐபிஎல் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் ஒரு சில அதிசயமும் அற்புதமும் நிகழ்ந்தால் ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கு.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சென்னை அணி தமிழகத்தைச் சேர்ந்த அணியாக இருந்தாலும் அதை தோனி வழிநடத்துவதால் அந்த அணிக்கு சர்வதேச அளவிலும் ரசிகர்கள் உள்ளனர். வயதானவர்கள் அணி (டாடி ஆர்மி) சூதாட்ட புகார் என பல சிக்கல்களில் சிக்கி அதிலிருந்து மீண்டு அசுர வளர்ச்சி பெற்று மீண்டு வந்து சாம்பியன் அணி என்பதை அனைவருக்கும் நிரூபித்தது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அறிவித்தது முதலே சென்னை அணிக்கு எதுவும் சாதகமாக இல்லை.
கொரோனா வைரஸின் பரவல் வேகத்தைவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சர்ச்சைகளும் சிக்கல்களும் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் பரவியது. இதன் விளைவாக இந்த தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி தற்போது புள்ளிப் பட்டியலில் அடிமட்டத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரின் எல்கிளாசிகோ என கருதப்படும் மும்பை- சென்னை அணிகளின் போட்டியில் வெற்றிகரமாகப் பயணத்தைத் துவங்கிய சென்னை அணி அடுத்தடுத்து ஒவ்வொரு போட்டியிலும் சின்ன சின்னக் காரணங்களுக்காகத் தோல்வியைச் சந்தித்தது.
ஆறு மாத லாக்டவுன் காலத்தில் கிரிக்கெட் விளையாடுவதை மறந்தவர்களாவே இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் விளையாட்டு இருந்தது. இதற்கு கேப்டன் தோனியும் விதிவிலக்கல்ல. இதனால் சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்குக் குறைந்துள்ளது. மேலும் சாதிக்கத் துடிக்கும் ஜகதீசன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவே தோனி யோசிப்பது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.
கணக்கு சொல்வது என்ன?
இதற்கிடையில் கால்குலேட்டர் கணக்காக சென்னை அணியின் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு எப்படி உள்ளது என்பதைப் பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது 6 புள்ளிகளுடன் உள்ளது. இனி சென்னை அணிக்கு 4 போட்டிகள் எஞ்சியுள்ளன. இதில் அனைத்திலும் வென்றால் 14 புள்ளிகள் கிடைக்கும்.
சென்னை 14 புள்ளிகளைப் பெற்றால் மட்டும் போதாது. புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் போட்டியில் உள்ள அணிகளான கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகள் 14ஐத் தொடக் கூடாது. 12 புள்ளிகளில் நிற்க வேண்டும்.
போட்டி அணிகளின் நிலை
தற்போது 10 புள்ளிகள் எடுத்துள்ள உள்ள கொல்கத்தா அணி இன்னும் 5 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதில் 4 போட்டியில் அது தோற்க வேண்டும். 12 புள்ளிகளோடு அது நிற்க வேண்டும்.
அதேபோலத் தற்போது 8 புள்ளிகளில் உள்ள ராஜஸ்தான் அணி இன்னும் 4 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதில் 2 போட்டிகளில் தோற்க வேண்டும். 12 புள்ளிகளைத் தாண்டக் கூடாது.
தற்போது 6 புள்ளிகளில் உள்ள ஹைதராபாத் அணி இன்னும் 5 போட்டியில் பங்கேற்கவுள்ளது. அதில் 2 போட்டியில் தோற்க வேண்டும்.
தற்போது 6 புள்ளிகளில் உள்ள பஞ்சாப் அணி இன்னும் 5 போட்டியில் பங்கேற்கவுள்ளது. அதில் 3 போட்டியில் தோற்க வேண்டும்.
வரும்... அனா வராது!
ஒருவேளை இந்த அணிகளில் ஏதேனும் ஒரு அணி கூடுதலாக வென்று 14 புள்ளிகள் பெற்றால் சென்னை அணி அந்த அணியைக் காட்டிலும் அதிக நிகர ரன் விகிதம் பெற்றிருக்க வேண்டும்.
இவை எல்லாமே நடந்தால் சென்னை பிளே ஆஃபுக்குப் போகலாம். இவை எல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியம்தான்... ஆனால் சாத்தியமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கணக்கு என்னும் அடிப்படையில் பார்த்தால் மேலே உள்ள காட்சிகள் அரங்கேற வாய்ப்புள்ளது. ஆனால், டெல்லிக்கும் மும்பைக்கும் எதிராகப் பஞ்சாப் ஆடிய ஆட்டத்தைப் பார்க்கும்போது அந்த அணியைச் சுலபமாகக் கழித்துக்கட்டிவிட முடியாது என்று தோன்றுகிறது.
அதுபோலவே கொல்கத்தா அணி சுனில் நரேன் வருகைக்குப் பின் மேலும் வலுவான அணியாகிவிடும். அந்நிலையில் அது 5இல் 4 போட்டிகளில் தோற்பது கடினம். இரண்டு அல்லது மூன்றில் வெல்லவே வாய்ப்பு அதிகம்.
சென்னை எல்லாப் போட்டிகளையும் நல்ல ரன்கள் அல்லது அதிக விக்கெட் வித்தியாசத்தில் வென்று, பிற அணிகள் தோற்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.
அதற்கு முன் வீரர்கள் விஷயத்திலும் அணுகுமுறையிலும் அணியில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.