கொரோனா காலத்தில் ரூபாய் நோட்டைப் பார்த்து பயந்து ஓடும் வணிகர்கள்!!! அச்சமூட்டும் காரணங்கள்!!!
- IndiaGlitz, [Wednesday,September 09 2020]
கொரோனா வைரஸ் பொருட்களின்மீது நாள் கணக்கில் தங்கியிருக்கும் என்ற தகவலை விஞ்ஞானிகள் முன்பே அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றனர். ஷாப்பிங் மால், கடைகள், வணிக நிறுவனங்கள், சந்தைகள் என அனைத்து இடங்களுக்கும் தற்போது மக்கள் சாதாரணமாக செல்வது வழக்கமாகி இருக்கிறது. அதேபோல பணப் பரிமாற்றத்திற்கு ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் நாம் பயன்படுத்துகிறோம். இந்த நோட்டுகளில் கொரோனா வைரஸ் தங்கியிருக்குமா என்பதே தற்போது பல வணிகர்களின் வலுவான சந்தேகமாக மாறியிருக்கிறது.
இதனால் கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகளின் மூலம் பரவுகிறதா என்பதைத் தெளிவுப் படுத்துமாறு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. இதற்காக CAIT சார்பில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. அதில் கொரோனா வைரஸ் நாணயத்தாள்கள் மூலம் பரவ முடிந்தால் இதுதொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் என்பது சங்கிலித் தொடர் போல பொதுமக்கள் பலரது கைகளுக்கு சென்றுவரும் நிலையில் இதுகுறித்த அச்சத்தை வணிகர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். மேலும், அச்சத்தை ஏற்படுத்தும் சில தகவல்களையும் CIAT தலைவர் பிரவீன் காண்டேல்வால் தெரிவித்து இருக்கிறார். அதில் “தொற்றுநோயைப் பரப்பும் திறன் கொண்ட நாணயத்தாள்களை வெளியிடுவது சில ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களுக்கு மிகுந்த கவலையாக உள்ளது.
தற்போது கோவிட் தொற்றுநோய் பரவலால் நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் மீது கணிசமான அக்கறை உள்ளது. ஏனென்றால், நாணயத்தாள் தொற்று நோய்களுக்கான கேரியராக இருக்கிறது என சர்வதேச தேசிய அறிக்கையில் தகவல் கூறப்பட்டு இருக்கிறது. இதனால் ரூபாய் நோட்டுகள் கொரோனா வைரஸின் கேரியர்களாக இருக்கிறதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்” என்று மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 96 மாதிரிகளில் 48 நாணயங்கள் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் மாசுப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த 2016 இல் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மருத்துவர்கள், இல்லத்தரசிகள், சந்தைகள் மற்றும் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து 120 க்கும் மேற்பட்ட வைரஸ் தேங்கியிருந்த ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 86.4% நோட்டுகளில் தொற்று வைரஸ்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், கடந்த 2016 இல் கர்நாடகாவில் ரூபாய் நோட்டுகளைக் குறித்து ஆய்வுசெய்தபோது 58- 100 ரூபாய் நோட்டுகளிலும் 20-50 ரூபாய் நோட்டுகளிலும் மேலும் பல 10 ரூபாய் நோட்டுகளிலும் கடுமையான வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இத்தகைய தகவல்களால்தான் தற்போது வணிகர்கள் கடுமையான அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.