மருத்துவமனைகள் மூலம் கொரோனா பரவுமா??? பீதியைக் கிளப்பும் புதுத் தகவல்!!!
- IndiaGlitz, [Thursday,June 11 2020]
கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் அன்றாட இயல்பு வாழ்க்கையையே பாதித்து இருக்கிறது. இந்நிலையில் ஒரு மனிதனின் கடைசி நம்பிக்கையாக இருப்பது மருத்துவ மனைகள்தான். அந்த மருத்துவமனை பரப்புகளில் கூட கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற பீதியை சில விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அப்படி மருத்துவமனை பரப்புகளில் உள்ள வைரகள் எவ்வளவு நாள் தங்கியிருக்கும் என்பது போன்ற சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு புது ஆய்வு ஒன்று மேற்கொள்ளபட்டு இருக்கிறது.
லண்டன் கல்லூரி கிரேட் அர்மட் (GOSH) பல்கலைக் கழகம்தான் இப்படி அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு ஆய்வை மேற்கொண்டு இருக்கிறது. மருத்துவ மனைகளில் அதாவது மருத்துவமனையின் கட்டிடம், அறை, தளம், வார்டு, படுக்கை போன்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் எப்படி பரவும், எவ்வளவு நேரம் தங்கியிருக்கும் போன்ற விவரங்களை தெரிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வில் கொரோனா வைரஸை அவர்கள் நேரடியாகப் பயன்படுத்த வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸின் DNA மூலக்கூறு மாதிரியே இருக்கும் ஒரு தாவர நோய்த்தொற்றின் DNA வை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
தாவர நோய்த்தொற்றில் இருந்து எடுக்கப்பட்ட DNA மூலக்கூறின் ஒரு பகுதியை செயற்கையாக நகல் எடுத்து, SARS-CoV வைரஸ்க்கு ஒத்த செறிவில் கிட்டத்தட்ட ஒரு மில்லி லிட்ட தண்ணீர் கலந்து ஒரு மருத்துவமனையில் ஒரு தளத்தில் வைத்தனர். அந்த மருத்துவமனை தளமானது கொரோனா நோய்த் தாக்காத நோயாளிகள் தங்கும் தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த தளத்திலும் நோயாளிகள் யாரும் இல்லாத நேரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று ஏற்படுத்தும் வைரஸை நீரில் கலந்து வைத்தவுடன் 10 மணி நேரத்தில் அந்த தளத்தில் 40 விழுக்காடு இடங்களுக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கதவு, ஜன்னல், படுக்கைகள், படுக்கை உறைகள், சிகிச்சை அறை, வார்டு போன்ற அனைத்து இடங்களிலும் 10 மணி நேரத்தில் 40 விழுக்காடு பரவி இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். அடுத்த 3 நாட்களுக்கு பின் அதன் அளவு 86% ஆகவும் நான்காம் நாளில் அந்த தளத்தில் இருந்த வைரஸின் அளவு 60% ஆகவும் குறைந்து காணப்பட்டது. மேலும் இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் லீனா சிரிக், நீரின் மூலம் பரவும் வைரஸ்கள் மருத்துவமனை பரப்புகளில் 1 வாரம் வரைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவித்து உள்ளார். ஆனால் மருத்துவமனை பரப்புகளில் தங்கும் வைரஸ் மனிதர்களுக்கு எந்த அளவில் நோயை ஏற்படுத்தும் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றானது பாதிக்கப்பட்ட நபர்களின் நீர்த் திரவங்களில் இருந்து மற்றவர்களுக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்துகிறது. இந்த ஆய்விலும் வைரஸ் தொற்றில் நீரை கலந்து வைக்கப்பட்டதால் மருத்துவ மனை பரப்புகளில் அது தங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை பரப்புகளில் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக மனிதர்களுக்கு நோயை பரப்பி விடும் என்ற அச்சத்தை இந்த விஞ்ஞானிகள் வெளிப்படுத்த வில்லை. எனவே பாதுகாப்பான கிருமி நாசினி, கையுறை, முகக்கவசம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இனி மருத்துவ மனைகளுக்குச் செல்லும்போது மேலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.