அறிகுறியே இல்லாத கொரோனா நோயாளியிடம் இருந்து கொரோனா நோய்த்தொற்று பரவுமா??? WHO வின் பதில் என்ன???

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

 

இந்தியாவில் பரவும் கொரோனா நோய்த்தொற்று பலருக்கும் நோய் அறிகுறிகளை வெளியே காட்டுவதில்லை என்ற கருத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் அறிகுறியே இல்லாத கொரோனா நோயாளிகள் மற்றவர்களுக்கு நோய்த்தொற்றை பரப்புவார்களா? என்ற சந்தேகமும் எழுப்பப் பட்டு இருக்கிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள உலகச் சுகாதார நிறுவனத்தின் தொற்று நோயியல் நிபுணர் மரியா வான் கெர்வோவ் “தொடர்பு தடமறிதல் செய்யும் பல நாடுகள் அறிகுறியற்ற நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளன. ஆனால் இவர்கள் மூலமாக வைரஸ் மேலும் பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது என இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வகையில் தொற்று பரவுவது மிகவும் அரிதானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரகால நோய்த்தொற்று நிபுணரான மைக் ரியான் தற்போது உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே நோய்க் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக நினைத்து பல நாடுகள் ஊரடங்கு விதிமுறைகளைத் தளிர்த்தி வருகின்றன. ஆனால் குறைந்தது 6 மாதத்திற்காவது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மத்திய அமெரிக்காவில் கொரோனா நோய்ப் பாதிப்பு அதி தீவிரமாக இல்லை என்ற தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இத்தாலியை விட கொரோனா நோய் பாதிப்பு பிரேசிலில் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பிரேசில், நோய்ப் பாதிப்பு பற்றிய விவரங்களை இணையத்தில் இருந்து அழித்து இருக்கிறது. இதனால் நோய்ப் பாதிப்பு பற்றிய குழப்பங்கள் அதிகமாகி இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த விரிவான அணுகுமுறை அவசியம் என்றும் மைக் ரியான் குறிப்பிட்டு உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதையும் மைக் ரியான் சுட்டிக் காட்டியுள்ளார்.

கொரோனா உலகம் முழுவதும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் விதிமுறைகளை தளர்த்தி சுய விருப்பம் கொள்ள வேண்டாம் எனவும் WHO வின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கருத்துத் தெரிவித்து இருந்தார். பல நாடுகளில் அறிகுறியே இல்லாமல் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது எனவும் டெட்ரோஸ் கருத்துக் கூறியிருந்தார். இந்நிலையில் தொற்று நோய் நிபுணரான வான் கெர்வோவ் அறிகுறியே இல்லாமல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்கள் மற்றவர்களுக்கு நோயை பரப்புகிறார்கள் என்பதற்கு இன்னும் போதுமான ஆதாரம் கிடைக்கவில்லை என்று தெளிவு படுத்தி இருக்கிறார்.