உணவு மூலம் கொரோனா பரவுமா??? WHO என்ன சொல்கிறது???
- IndiaGlitz, [Thursday,May 21 2020]
“கொரோனா வைரஸ் உணவு மூலம் பரவும்” எனச் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற தகவலை WHO டிவிட்டர் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு தளர்த்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் வெளியில் உணவு வாங்குவது மற்றும் ஆர்டர் செய்வது போன்ற பழக்கங்கள் மீண்டும் தொடர ஆரம்பித்து இருக்கிறது. எனவே கொரோனா வைரஸ் உணவு மூலம் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்தச் சந்தேகத்திற்கு தற்போது WHO முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. அதாவது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படுகின்ற சளி போன்ற நீர்த்திரவங்களின் மூலம் பரவும். பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து வெளியாகின்ற நீர்த்திரவங்கள் நேரடியாக மனித நுரையீரலில் இருக்கும் ACE2 புரதத்தைப் பற்றிக்கொண்டு உடலில் நோய் பாதிப்பை உண்டாக்க ஆரம்பிக்கும். கொரோனா வைரஸ் நுரையீரல் பாதையில் இருக்கும் குறிப்பிட்ட புரதத்தைப் பற்றிக்கொள்ளும் தன்மையை மட்டுமே கொண்டிருக்கிறது. மேலும் நுரையீரல் சுவாசப் பாதையில் இருக்கும் ஃபியூரி என்ற வேதிப்பொருளும் அது பல்லாயிரக்கணக்கான அளவில் தன்னைப் பிரதி எடுத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்த வைரஸ் உடலில் வேறு எந்த உறுப்பிலும் வளர்வதற்கு ஏற்ற சக்தியை பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பொருட்களின் வழவழப்புத் தன்மையால் கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற பொருட்களின் மீது 24 மணி நேரம் அளவிற்குக் கூட உயிரோடு இருக்க முடியும் என்ற தகவலை அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் (FDA) தெளிவு படுத்தியிருந்தது. அதனால் பொருட்களைத் தொட்டப் பின்பு கிருமிநாசினியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப் படுகிறது. மேலும் கைகளை முறையாக 20 நிமிடம் சோப்பு போட்டு கழுவவும் விஞ்ஞானிகள் பரிந்துரைக் கின்றனர். வாய், மூக்கு, கண் போன்ற உறுப்புகளை முடிந்த வரை கையால் தொடுவதையும் தவிர்க்க வேண்டும். குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
வெளியில் இருந்து உணவுப் பொருட்களை வாங்கும்போது பணியாளர்கள் சுகாதார முறையைக் கடைபிடிக்கிறார்களா எனக் கண்காணிப்பது அவசியம். ஒருவேளை உணவில் கொரோனா வைரஸ் கலந்து விட்டாலும் அது மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தும் எனக் கூறுவதற்கு இதுவரை சான்றுகள் எதுவும் இல்லை என்பதையும் WHO தெளிவுபடுத்தி இருக்கிறது. எனவே சந்தையில் இருந்தும் கடைகளில் இருந்தும் வாங்கிவரும் உணவுப் பொருட்களின்மீது கிருமிநாசினிகளை தெளிக்க வேண்டாம். அப்படித் தெளிக்கப் படும் கிருமிநாசினியால் கடும் உடல் உபாதைகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.