சர்வதேச விருதை பெறும் முதல் இந்தியர்: மணிரத்னம் பட ஒளிப்பதிவாளருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!
- IndiaGlitz, [Sunday,February 25 2024]
மணிரத்னம் உள்பட பல முன்னணி இயக்குனர்கள் படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஒளிப்பதிவாளருக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான தளபதி, ரோஜா, இருவர், உயிரே, ராவணன் ஆகிய படங்களுக்கும் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ உட்பட ஏராளமான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் சந்தோஷ் சிவன். இவர் ஏற்கனவே சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருது பெற்றுள்ளார் என்பதும் சில திரைப்படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சர்வதேச அளவில் திறமையான ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் பியர் ஆஞ்சனியூஸ் (Pierre Angenieux) என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெரும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு முன் இந்த விருதை பிரெஞ்சு ஒளிப்பதிவாளர் பிலிம் ரூஸலாட், அமெரிக்க ஒளிப்பதிவாளர் வில்மோஸ் சிக்மண்ட் , ரோஜர் , கிறிஸ்டோபர் டாய்ல் பெற்ற நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த அதுவும் தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்கள் பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.