கொரோனா குடும்பத்துக்கே ஆப்பு வைக்கும் புதிய தடுப்பூசி!!! விஞ்ஞானிகள் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!!!
- IndiaGlitz, [Thursday,August 27 2020]
மனிதன் மற்றும் விலங்கு இனத்திற்கு ஆபத்து விளைவிக்கும் பல வகையான நோய்த்தொற்றுகள் காலந்தோறும் பரவி வருகிறது. ஆனால் கொரோனா நோய்த்தொற்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலகத்தையே புரட்டி போட்டிருக்கிறது. இந்தப் பாதிப்பில் இருந்து வெளிவருவதற்கு கொரோனா தடுப்பூசியை மட்டுமே உலக நாடுகள் நம்பியிருக்கின்றன. ஆனால் கொரோனா தடுப்பூசிகள் பெரும்பாலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அணுகுமுறையைக் கொண்டு அவசரகதியில் ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இதனால் கொரோனா தடுப்பூசியின் விளைவுகள் எவ்வளவு நாள் மனித உடம்புக்குள் இருக்கும் என்பதைத் தெளிவாக கூறமுடியாது என்ற சந்தேகத்தையும் விஞ்ஞானிகள் எழுப்புகின்றனர்.
இந்நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனாவினால் ஏற்படும் அனைத்துத் தொற்றுகளுக்கும் விடை கொடுக்கும் விதமாக புதிய தடுப்பூசி ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்தத் தடுப்பூசி 3 டி கணினி மாடலிங் முறையினால் உருவாக்கப்பட்டது. இந்தப் புதிய தொழில் நுட்பத்தினால் கொரோனா குடும்ப வகை வைரஸின் அனைத்துத் தகவல்களையும் நினைவுப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு உள்ளது எனவும் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா குடும்ப வகை வைரஸ்களான சார்ஸ், மெர்ஸ் போன்றவை விலங்கு இனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மீண்டும் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை பரப்பி விடுகிறது. இதனால் எதிர்காலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. அதைத் தடுக்கும் விதமாக கொரோனா குடும்பத்தின் அனைத்து வகை வைரஸ்களின் பாதிப்புகளுக்கும் எதிராக மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆண்டிஜென்களை உருவாக்கும் முயற்சியில் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் வெற்றியும் கண்டுள்ளனர்.
டியோஸ் கோவேக்ஸ்-2 எனப் பெயரிடப்பட்ட புதிய கொரோனா தடுப்பூசி தற்போது பரவிவரும் SARS-Covid-2 மட்டுமல்லாது விலங்குகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சார்ஸ், மெர்ஸ் போன்ற வைரஸ்களுக்கு எதிராகவும் வேலை செய்யும் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதனால் எல்லா வகை கொரோனா பாதிப்புகளுக்கும் ஒரே தீர்வாகவும் இதைப் பயன்படுத்த முடியும் என்றும் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மேலும் இந்தத் தடுப்பூசி வலியை ஏற்படுத்தும் ஊசி மூலம் செலுத்தாமல் ஸ்பிரிங்க் சக்தி கொண்டு எளிமையான முறையில் மனிதர்களுக்கு செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி ஏற்கனவே வெற்றிகரமாக சோதனையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து இன்னொரு தடுப்பூசி வெற்றிகரமான முடிவை அறிவித்து மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த விஞ்ஞானிகள் கொரோனா இனத்தின் அனைத்து வைரஸ்களும் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் எனவே இதுபோன்ற தடுப்பூசி கண்டுபிடிப்புகள் வரவேற்கத் தக்கது எனக் கூறியுள்ளனர்.
தற்போது சோதனைக் கட்டத்தில் இருக்கும் டியோஸ் கோவேக்ஸ்-2 இந்த ஆண்டின் இறுதியில் மனிதர்கள் மீதான சோதனையைத் தொடங்கும் எனவும் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இங்கிலாந்து அரசு இந்த தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு 1.9 மில்லியன் பவுண்டுகளை கொடுத்து உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இம்முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் சிக்கலான கொரோனா வைரஸின் அனைத்து பாதிப்புக்கும் ஒரே தடுப்பூசியை உலகம் முழுவதும் செலுத்தி மனிதர்களுக்கு பாதுகாப்பினை அளிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.