லஞ்சம் கொடுத்த பணம் வீடுதேடி வரவேண்டுமா? 1100க்கு டயல் செய்யுங்கள்!

  • IndiaGlitz, [Thursday,June 08 2017]

சாட்டிலைட் முதல் சகல துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியா, லஞ்சத்தை ஒழிப்பதில் மட்டும் மிகவும் பின் தங்கியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் ஆசிய அளவில் அதிக லஞ்சம், ஊழல் நடைபெறுவது இந்தியாவில்தான் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் லஞ்சத்தை ஒழிக்க ஆந்திரமுதல்வர் சந்திரபாபுநாயுடு ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டு அதை பொதுமக்கள் கொடுத்திருந்தால் உடனடியாக 1100 என்ற எண்ணுக்கு போர் செய்து விரிவான புகாரை அளிக்கலாம். பொதுமக்கள் கொடுக்கும் புகார் விசாரணை செய்யப்பட்டு அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த அரசு ஊழியர் லஞ்சம் பெற்றாரோ அதே ஊழியர் உங்கள் வீடு தேடி வந்து லஞ்சப்பணத்தை திருப்பி தருவார். அரசு ஊழியர்கள் கடுமையான தண்டனையில் இருந்து தப்பிக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்திற்கு ஆந்திர மக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், கடந்த சில நாட்களில் 12க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர். முறையான விசாரணைக்கு பின்னரே இதில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்று கூறினார்.

இதுகுறித்து ஆந்திர மாநில அரசு ஆலோசகர் பிரபாகர் அவர்கள் கூறியபோது, 'ரூ.500, ரூ.1000 லஞ்சத்தை திருப்பி கொடுத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் புகார் தரும் அனைவருக்கும் பணம் திரும்ப கிடைத்து விடும் என அரசு தரப்பில் உறுதியும் அளிக்கப்படாது. 1100 புகார் மையத்திற்கு இதுவரை லஞ்சம் தொடர்பாக 3000 புகார்கள் குவிந்துள்ளன. அது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

இந்த நடைமுறை தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்தால் லஞ்சமில்லா இந்தியா விரைவில் உருவாகும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.